» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடிப் பயணிகள் இரயில் சேவைகளை உடனடியாகத் தொடங்கவும், பயன்பாட்டில் உள்ள இரயில் சேவைகளை நீட்டிக்கவும் கோரி பொதுமக்களும், பயணிகள் நலச் சங்கங்களும் தென்னக இரயில்வேக்கு விரிவான கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டம் திருநெல்வேலி சந்திப்பை 'ரூட் ரிலே இன்டர்லாக்கிங்' முறையிலிருந்து நவீன 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' முறைக்கு மேம்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட டிராக் சர்க்யூட்டுகள், ஆக்சில் கவுண்டர்கள் மற்றும் புதிய 600 மீட்டர் நீளமுள்ள 6-வது புதிய நடைமேடை ஆகியவை அமைக்கப்பட்டு, உள்கட்டமைப்பு நெரிசல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இரயில்களின் வேக வரம்பு மணிக்கு 15 கிலோமீட்டரிலிருந்து 60 முதல் 70 கிலோமீட்டராகக் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல இரயில்களை இயக்கும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் வழித்தட இரயில்கள் எவ்வித தாமதமும் இன்றி தடையின்றி இயக்கப்பட முடியும். இதனால் புதிய இரயில்களை இயக்க எவ்வித தொழில்நுட்பத் தடையும் இல்லை எனக் கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவில், தற்போதைய இரயில் பெட்டிகளை முறையாகப் பயன்படுத்தி பயணிகளுக்குச் சேவை செய்யும் வகையில் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
முதலாவது கோரிக்கை: திருவனந்தபுரம் வடக்கு இரயில் நிலையத்திலிருந்து காலையில் நாகர்கோவில் நோக்கி புறப்படும் பயணிகள் இரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இப் பணிக்குத் திருவனந்தபுரத்தில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமிர்தா இரயிலின் பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், விழிஞ்சம் சர்வதேச கொள்கலன் முனையம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆகிய இரு முக்கிய தொழில்முறை துறைமுகங்களை இணைக்கும் நேரடி வழித்தடம் உருவாகும்.
இரண்டாவது கோரிக்கை: பொதுமக்கள் அலுவல் நேரத்திற்குப் பயணம் செய்யும் வகையில், 56708/56707 திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் இரயில் மற்றும் வண்டி எண் 56305/56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் இரயில் ஆகியவற்றை இணைத்து ஒரே நேரடி இரயிலாக 'திருநெல்வேலி - திருவனந்தபுரம் வடக்கு' என்று இயக்க வேண்டும். மேலும், நாகர்கோவிலில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் 17235/17236 பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
மூன்றாவது கோரிக்கை: நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே முறையான நேரடி காலை நேரப் பயணிகள் இரயில் சேவை இல்லாததால், கொல்லம் – கன்னியாகுமரி 66305/66306 மெமு (MEMU) இரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இது தினசரி தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களின் பயணத் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்யும்.
புதிய அதிநவீன வசதிகள் பொதுமக்களுக்கு முழுமையாகப் பயன்படும் வகையில் இப் பயணிகள் இரயில் சேவைகளை நீட்டித்தால் இரயில்வேயின் வருவாய் அதிகரிப்பதுடன், ஆயிரக்கணக்கான தினசரி பயணிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் எனப் பயணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)


