கன்னியாகுமரியின் புவிஅமைப்பு (1 of 1)



கன்னியாகுமரி மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப் பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. 

இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.

ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.

தாமிரபரணி ஆறு

இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பரளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

வள்ளியாறு

இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, மணவாளக்குறிச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு

இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி, பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.

மருத்துவ வரலாறு

இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற காந்தமதன மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். 

பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.



ரப்பர் உற்பத்தி

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.


Favorite tags



Thoothukudi Business Directory