» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)



மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.08.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜுலை மாதத்தில் 40.53 மி.மீ மழை பெய்துள்ளது, இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 26.40 மி.மீ-ஐ விட 53.52 சதவிகிதம் அதிகமாகும். 

மேலும் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 21.08.2025 ம் தேதி வரை 10.40 மி.மீ மழை பெய்துள்ளது. இது இம்மாத வளமான மழையளவான 23.30 மி.மீ-ஐ விட 55.36 சதவிகிதம் குறைவாகும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 23176 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு பெய்த வளமான மழையளவு மற்றும் அணைகளில் நீர்திறப்பு ஆகியவற்றால் சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது நடப்பாண்டு 8,373 ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

மேலும் 2025 கோடை பருவத்தில் விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்திரவிடப்பட்டு, தற்பொழுது வரை 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2055.28 மெ.டன் நெல் 596 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 09.02.2025 முதல் விவசாயிகளின் நில உடைமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனிக்குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 20.08.2025ம் தேதி வரை 27638 பி.எம்.கிசான் மற்றும் 12981 இதர விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். குறிப்பாக பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்தடுத்த தவணைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, வலைதளத்தில் இதுநாள் வரை பதிவுசெய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகவும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியானது, 2024ம் ஆண்டு ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கீட்டின்போது பயிர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த விவரங்களை புகைப்படத்துடன், செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் ஆண்டிற்கு மூன்று முறையாக காரீப், ராபி மற்றும் கோடைப் பருவங்களில் இந்த மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் 2025-26 இந்த மின்னணு பயிர் கணக்கீடு பணியானது ஒப்பந்த பணியாளர் வழங்கும் நிறுவனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவர் அல்லது இதர பட்டப்படிப்பு படித்தவர்கள், இணையதள ஆண்ட்ராய்டு செயலியை உபயோகிக்க தெரிந்தவர்களாக உள்ளவர்கள் இக்கணக்கீட்டு பணியினை மேற்கொள்ள தகுதியுடையவர். 

இப்பணியினை மேற்கொள்ள சேவைக்கட்டணமாக ஒரு சர்வே எண்ணிற்கு ரூ.20 வழங்கப்படும். விருப்பமுள்ள பட்டதாரிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டு கார் பருவத்தில் நாளது தேதி வரை 7,98,628 கிராம உட்பிரிவு புல எண்களில் 37,935 உட்பிரிவுகளுக்கு மின்னணு பயிர் கணக்கீடு முடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தூர்வாரும் நிதியின் கீழ் சிற்றாறு வடிநில கோட்டம், தென்காசி, நம்பியாறு பாசனத்திற்குட்பட்ட கால்வாய்கள் ஏர்வாடி உப்பத்து ஓடை 3 கி.மீ நீளம், கடனாநதி பாசனத்திற்குட்பட்ட சாரல்குளம் மற்றும் வழுதூர்குளம் உபரி நீர் கால்வாய் 3.5 கி.மீ நீளம் மற்றும் வெள்ளோடை 2.5 கி.மீ நீளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. தாமிரபரணி வடிநிலக்கோட்டம், திருநெல்வேலி மூலம் கால்வாய்கள் 53.45 கி.மீ நீளம், பிரிவு கால்வாய் மற்றும் வழங்கு கால்வாய்களில் 30.21 கி.மீ நீளம் தூர்வாரப்பட்டுள்ளது.

வருடாந்திர பராமரிப்பு நிதியின் கீழ், கோதையாறு வடிநில கோட்டம் நாகர்கோவில், வடக்கன்குளம் பாசனப்பிரிவிற்குட்பட்ட இராதாபுரம் கால்வாயின் கிளைக்கால்வாய்கள் 21.80 கி.மீ நீளம் தூர்வாரும் பணிகள் நடைப்பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 755 குளங்களில் மண்பாண்டம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இசேவை மூலம் 1228 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 655 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு 2025-26 -ல் 20.08.2025 வரை பயிர் கடனாக உழவர் கடன் அட்டை மூலம் ரூ.4303.72 கோடி வழங்கப்பட்டுள்ளது மற்றும் கால்நடை வளர்க்கும் 2240 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் ரூ.1132.37 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டு கார் பருவத்தில் நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர்காப்பீடு செய்து கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாளது தேதி வரை 192 விவசாயிகள் பயிர்காப்பீடு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் பயனடைவதற்கு விவசாயிகள் 2 சதவீத காப்பீட்டு தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது, எஞ்சியுள்ள பிரிமியத் தொகை மத்திய மாநில அரசால் விவசாயியின் சார்பாக செலுத்தப்படும். நெற் பயிருக்கு விவசாய கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டும் 31.08.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிரான வாழைக்கு காப்பீடு செய்ய 16.09.2025 கடைசி நாளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் யுனிவர்சல் சம்போ இன்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் pmfby.gov.in என்ற வலைதளம் மூலமாக விவசாயிகள் நேரடியாகவும் பதிவு செய்யலாம். நடப்பாண்டில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.720/- மற்றும் வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1801/- விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் காப்பீடு கட்டணமாகும்.

பிரதம மந்திரியின் கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 34,434 பயனாளிகள் பதிவு செய்து பயன் பெற தகுதியுடையவராக உள்ளனர். இவற்றில் 30900 பயனாளிகள்; பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவற்றில் e-KYC பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 1497 பயனாளிகளுக்கு e-KYC செய்து கொடுத்திடவும், வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைப்பு செய்யப்படாமல் உள்ள 1011 பயனாளிகளை கண்டறிந்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணியும் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களால் இம்மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் அனைத்து ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்துத் துறைகளின் வட்டார அலுவலர்கள் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி பயன்பெறும் வகையில், மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


இம்முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் உழவர் நலன் சார்ந்த இதர அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், உயிர்ம வேளாண்மைச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள், மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான வழிமுறைகள், அவற்றை சந்தைப்படுத்துவற்கான ஆலோசனைகள்/ வழிகாட்டுதல்கள் வழங்குதல் முதலிய சேவைகள் வழங்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார வாரியாக வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் மொத்தம் 115 வருவாய் கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை- உழவர் நலத்துறை முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் துறை வாரியாக 153 மனுக்கள் பெறப்பட்டு, 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 51 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.

ஜூலை 2025-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 129 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றுள் வேளாண்மை சார்ந்த மனுக்கள் 98 எண்களும், வேளாண்மை சாராத மனுக்கள் 31 எண்களும் பெறப்பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.450 மானியத்தொகையில் மாடித்தோட்ட தொகுப்பு 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ரூ.2,588 மதிப்பிலான பசுந்தாள் உர விதை – தக்கைப்பூண்டு இடுப்பொருட்களை ரூ.1250 மானிய விலையில் ஒரு பயனாளிக்கும், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மின்தெளிப்பான் ரூ.3 ஆயிரம் மானியத்தொகையில் ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

இக்கூட்டத்தில், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் இளையராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory