» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:27:42 AM (IST)

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்...
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் - திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகியவர் ஏவிஎம் சரவணன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவிஎம் அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் "பராசக்தி”, முரசொலி மாறனின் "குலதெய்வம்” என ஏவிஎம் நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவிஎம் சரவணன்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏவிஎம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)

கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
சனி 6, டிசம்பர் 2025 11:40:40 AM (IST)


.gif)