» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)



அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறியுள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிவருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி(50%) விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என ரஷிய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் கூறுகையில், "அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்தால் பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிடம் இருந்து வர்த்தகத்தைப் பெற வரியின் மூலமாக பேரம் பேசுகிறது. இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரை வரிகளை விதித்து அச்சுறுத்தியுள்ளது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. 

இதுபோன்ற செயல்களை எதிர்கொள்ளும்போது மௌனம், கொடுமைப்படுத்துபவருக்கு தைரியத்தை தருவதாக இருக்கிறது. உலக வர்த்தகத்துடன் பல்வேறு வர்த்தக அமைப்புகளை நிலைநிறுத்த இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தக போரை மேற்கொண்டதால் இந்தியாவுடன் ரஷியா, சீனா நாடுகளின் உறவுகள் மேம்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியும் 2018க்குப் பிறகு அடுத்த வாரம் பெய்ஜிங்கிற்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory