» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

chickenSale.jpg

கறிக்கோழிக்குத் தீவனக் கட்டுப்பாடு நெறிமுறைகளை அரசு அமல்படுத்தாவிட்டால், தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்குக் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்திப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு மாநிலச் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, மாநிலத் தலைவர் துரைராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கறிக்கோழிக்குத் தீவனக்கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை, அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக எடுத்துரைக்க வேண்டும்.

கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பும் தீவனம் வழங்கப்படுவதால், அவற்றின் எடை செயற்கையாகக் கூட்டப்படுகிறது. மேலும், உடலில் தங்கியிருக்கும் தீவனம் முழுமையாக ஜீரணமாகாமல் இருப்பதன் காரணமாகக் கழிவுகள் வெளியேறிச் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நெறிமுறையைக் கோழி உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்காத பட்சத்தில், அதனைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்குக் கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் காலங்களில் மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை தடை நாட்களிலும் கறிக்கோழி விற்பனைக்குத் தனி அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் கோழிக்கழிவுகளை அகற்றும் நவீனக் கூடங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory