» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள்: சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

சனி 20, செப்டம்பர் 2025 5:53:28 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகல்வி துறை சார்பில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பள்ளிகல்வி துறை சார்பில் இன்று (20.09.2025) நடைபெற்ற முப்பெரும் விழாவில் கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்கள், அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் ரோஸ்மியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.47.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.194.58 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.240.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத்தலைவர் பேசியதாவது:-
இந்தியாவில் பள்ளி கல்வி துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உயர்கல்வி, மற்றும் பெண்கள் உயர்கல்வி கற்பதில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற தமிழ்நாட்டை சார்ந்த பலர் இன்று உலக அளவில் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். 

உலகளவில் யாருமே எதிர்பாரத வண்ணம் சந்திரமண்டலத்தின் தென் பகுதியில் வின்கலத்தை நிலை நிறுத்தி தரையிறக்கிய பெருமை இந்திய விண்வெளிக்கும், இந்தியாவிற்கும் தான் உண்டு. அதன் தலைவராக இருந்து பெருமை சேர்த்தவர் அரசு பள்ளியில் பயின்ற நாரயணன் ஆவார். அதைபோன்று சிவன் விஞ்ஞானி அவர்களும் தமிழ்வழியில் படித்து, இந்தியாவிலயே உலத்திலயே தலைச்சிறந்த விஞ்ஞானியாக செயல்பட்டுகொண்டிருக்கின்றார். 

இந்திய வெண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்றவர்கள் ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். அது போன்று உலகளவிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த அறிவியல் வல்லுநர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். 

இதற்கு காரணம் தமிழ்நாட்டின் கல்வி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்க பாடுபட்டார். அது போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாணவ மாணவிகளின் கல்வி திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாணவ மாணவிகளுக்காக இன்று கொண்டு வரப்பெற்ற காலை உணவுத்திட்டம் உலக அளவில் ஒரு முன்னோடி திட்டம் ஆகும்.

அரசு பள்ளியில் நாம் படிப்பதை பெருமையாக எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மட்டும் அல்ல அரசு கல்லூரிகளும், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, சட்டகல்லூரிகள் தலைச்சிறந்து சிறப்பாக விளங்குகிறது என்பதற்கு மாணவர்கள் உயர் கல்வி கலந்தாய்வுகளில் அரசு கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில, ஆர்வமாக தேர்வு செய்கின்றனர்.

பணகுடி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட மக்கள் ரோஸ்மியாபுரம் பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை வைத்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தந்தார்கள். தற்போது இப்பள்ளியில் முதல்வர் திருக்கரங்களால் ரூ.47.12 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தந்திருக்கின்றார்கள்.

தமிழ் படிப்பதை போன்று ஆங்கிலத்திலும் நமது மாணவ,மாணவிகள் சிறந்து விளங்குவதற்காக ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். ஆங்கில மொழியும் நன்கு அறிந்தால் தான் உலக அளவில் கல்வியில் சிறந்து விளங்க முடியும். கடந்த ஆண்டு இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கின்றது. அதற்கு இப்பள்ளிக்கும்,பயிற்று வித்த ஆசிரியர்களுக்கும் எனது தொகுதி மக்கள் சார்பாகவும், முதல்வர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணகுடி பேரூராட்சி பகுதியில் உள்ள சேதமடைந்தசாலை சரி செய்யப்பட்டும், புதிய சாலை போடப்பட்டும் வருகிறது. ஏற்கனவே தலைவர் கலைஞர் ஆட்சியில் தான் பணகுடியில் தாமிரபரணி கூட்டுகுடி நீர் திட்டத்திற்கு 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆசிரியராக இருந்த என்னை, சட்டமன்ற உறுப்பினராக்கி, சட்டமன்ற உறுப்பினரை சட்டமன்றப் பேரவைத்தலைவராக்கிய பெருமை முதலைமைச்சருக்கு தான் சேரும்.

மேலும் பணகுடி பேரூராட்சி, வள்ளியூர் பேரூராட்சி உட்பட ஏழு பேரூராட்சிகளுக்கு மற்றும் களக்காடு நகராட்சிக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு செய்து தாமிரபரணி கூட்டுகுடி நீர் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுத்து திருவித்தான்புள்ளியில் நீர்தேக்க தொட்டியில் சுத்திகரிப்பு செய்து, குடிநீர் விநியோகம் செய்ய ஒப்புதல் தந்து அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து இல்லங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் கிடைக்கும். பணகுடி பேரூராட்சியில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் 12,000/- குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பணகுடி பேரூராட்சி பகுதியில் வீடு இல்லாத ஏழைகளுக்கு 468 குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிடு செய்து தந்து குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், பண குடி பேரூராட்சி மன்ற தலைவர் தனலெட்சமி தமிழ்வானன், ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் தஸ்லீமா அயூப்கான், மாவட்ட கவுன்சில் பாஸ்கர், கவுன்சிலர்கள் கோபி, சொரிமுத்து, ஜெயராமன், ஆனந்தி, ஆஸா, அலிம், தலைமை ஆசிரியர்கள் மலர் விழி, சுப்புலெட்சுமி, ஏர்வாடி பள்ளி மேலாண்மை குழு தலைவர் மேரி ஸ்டெல்லா ரோஸ், முக்கிய பிரமுகர் சித்திக், உட்பட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory