» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜிஎஸ்டி வரிகுறைப்பு என்பது மாற்றம் அல்ல புரட்சி : நிர்மலா சீதாராமன் பேச்சு

சனி 20, செப்டம்பர் 2025 12:55:47 PM (IST)



ஜிஎஸ்டி சீர்திருத்தம் பிரதமர் மோடி கொடுத்த தீபாவளி பரிசு என்று கோவில்பட்டியில் நடைபெற்ற விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீப்பெட்டி தொழில் தொடர்பான கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும், தீப்பெட்டி தொழிலை சிவகாசிக்கு கொண்டு வந்த சண்முக நாடார், அய்யநாடார் ஆகியோர் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். 

பின்னர், தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு மலரை வெளியிட்டு, பெண் தொழிலாளர்களை கவுரவித்து அவர் பேசியது: "தென் மாவட்டங்களை பற்றி ஏராளமான விஷயங்களை தெரிந்து கொண்டுள்ளேன். தென் மாவட்டங்கள் இந்த நாட்டின் நரம்பு. இங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பவர்கள் இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள். வீரம், கவிதை, தேசப்பற்று என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். 

வானம் பார்த்த, வறட்சியான பூமியாக இருந்தாலும் கூட, தங்களது கைத்தொழிலால் இந்தப் பகுதிக்கு வாழ்வளிக்கக் கூடியவர்கள் இப்பகுதி பெண்கள்தான். பெண் தொழிலாளர்கள் முன்னிலையில் நடக்கக் கூடிய தொழில் தீப்பெட்டித் தொழில். அவர்களுக்கு தலைசார்ந்த வணக்கங்கள். வறட்சியான பூமியில், தன் வீட்டையும், தொழிலையும் காப்பாற்றிவிட்டு, இந்த பூமியில் இருந்து இவ்வளவு பெரிய தொழிலை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை, இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு பெண்மணியை சார்ந்தது. 

பெண்களால் தான் தீப்பெட்டித் தொழில் இவ்வளவு தூரம் வந்துள்ளது. கட்டுப்பாடு, கைத்திறனோடு இந்த தொழிலை நடத்துகிறார்கள். பெண்கள்தான் இந்த வண்டிக்கு சக்கரம். சக்கரம் இல்லாமல் வண்டி நகராது. பெண் தொழிலாளர்கள் இல்லாமல் தீப்பெட்டித் தொழில் நடைபெறாது. சின்ன வயதில் இருந்தே எனக்கு தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலை பற்றி நன்கு தெரியும். ஊரில் இருந்து யார் என்னை பார்க்க வந்தாலும் அவர்களை நான் கரிசனத்தோடு அணுகுவேன். ஒரு கோரிக்கை வந்தாலும் உடனே பிரதமரிடம் பேசுவேன். எனக்கு ஆதரவு கொடுத்தார் பிரதமர்.

தூத்துக்குடியில் மத்திய அரசு மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. எம்.பி. இல்லையென்றால் என்ன, அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான், அங்கும் சிறப்பாக நாம் செயல்பட வேண்டும் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மீது பிரதமருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம் உள்ளது.

இந்த விழாவை பிரதமருக்கான பாராட்டு விழாவாக கருதுகிறேன். அவருடைய ஆதரவு இல்லாமல் நாம் எதையுமே செய்திருக்க முடியாது. தென் மாவட்டங்களில் உள்ள பெரிய திட்டங்களுக்கு பிரதமர் தான் காரணம். SPOKE IN THE WHEEL என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு சக்கரத்தில் உள்ள ஆரங்களில் நானும் ஒரு ஆரம். ஆனால் அந்த சக்கரம் நமது பிரதமர். அவரால்தான் நமது நாட்டில் பல பேர், பல திட்டங்களின் மூலமாக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறார்.

2047-ம் ஆண்டுக்குள் முன்னேற்றமடைந்த இந்தியா என்ற நிலைக்கு எடுத்துச் செல்ல பல முயற்சிகளை எடுக்கிறார் பிரதமர். 2047-ம் ஆண்டுக்குள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் நமது நாட்டு வர்த்தகத்துக்கு எந்த விதத்தில் பங்காற்ற முடியும் என்பது குறித்து நீங்களே ஒரு வழிவகுத்து, திட்டத்தை தயாரித்து கொடுத்தால், அதற்கு ஏற்ற விதமாக என்னென்ன மத்திய அரசு மூலமாக கொடுக்க முடியும் என்பதற்கான முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுவேன்.

இந்த மாவட்டங்கள் முன்னேற்றமடைய, உங்களது தொலைநோக்கு அறிக்கையை கொடுத்தால், எல்லோருக்கும் உதவும் வகையில் அதை மத்திய அரசு மூலமாக செய்து கொடுக்க முடியும். தீப்பெட்டித் தொழில் இன்னும் 200 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து சொன்னால் உபயோகமாக இருக்கும்.

கடம்பூர் ராஜு தனது தொகுதிக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அந்த மாதிரி ஒரு எம்எல்ஏ இருப்பதால் உங்கள் குறைகள் தீர்க்கப்படுகிறது. 2026-ல் உங்களுக்கு எம்.எல்.ஏ.வோ, 2029-ல் எம்.பி.யோ உங்கள் கஷ்டத்தை புரிந்து வேலை செய்யக் கூடிய கடம்பூர் ராஜு மாதிரியானவர்களை தேர்ந்தெடுங்கள்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், தென் மாவட்டங்களை இணைத்து, எதிர்காலத்தில் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு தேவையான தொலைநோக்கு திட்ட அறிக்கை தயாரித்துக் கொடுத்தால், 2047-ம் ஆண்டுக்கு முன்னர் நல்ல திட்டங்கள் மூலம் இந்த மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.

இந்த முறை ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. புரட்சி செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறோம். 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது. 28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் என்பது மக்களுக்கான ஜிஎஸ்டி சேமிப்பு என்பதுதான். ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் கிடைக்கும் சேமிப்பை உங்கள் குடும்ப நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜிஎஸ்டி புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார். நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு எல்லாரும் வழிவகுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

விழாவில் விழாக் குழுத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.எஸ்.டி. கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் தீப்பெட்டி தொழில் கடந்து வந்த பாதை குறித்து விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் செ.ராஜு, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஐடிசி நிறுவன நிதித்துறை தலைவர் சுரேந்தர் கே.ஷிபானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory