» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!

வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)



அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசினார்.

குமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சி மருங்கூரிலிருந்து அமராவதிவிளை செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி அதிமுக சார்பில் கடந்த 17ஆம் தேதி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தை தொடங்கி வைத்த தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கடையை அகற்றும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடர் போராட்டமாக நடைபெறும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிலையில் அமராவதி விளையில் நேற்று டாஸ்மார்க் கடையை அகற்ற வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மருங்கூர் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி சீனிவாசன், அமராவதிவிளை பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கி கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கு வழங்கினார்.

கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை துவங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசியதாவது: மருங்கூரு பேரூராட்சி மருங்கூரில் இருந்து அமராவதிவிளை செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் கடை எண் 4740 செயற்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்தும் குடிமகன்கள் செய்யும் அடாவடியின் காரணமாக இப்பகுதி வழியாக பொதுமக்கள், மாணவ மாணவிகள் சிறுவர் சிறுமியர்கள் வயது முதிர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பிலும், பங்குத்தந்தை சார்பிலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரிடம் வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த டாஸ்மார்க் கடையை இப்பகுதியில் இருந்து அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் நேற்று நான்காவது நாளாக தொடர் போராட்டம் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அமராவதிவிளை செல்லும் சாலையில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அமராவதிவிளை பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் கூறியதாவது: தமிழக அரசுக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கும் குறிப்பாக மருங்கூரில் நடத்துகின்ற இந்த மதுக்கடை உரிமையாளர்களுக்கும் ஒரு அன்பான ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அமராவதிவிளை என்கின்ற ஒரு அழகான அற்புதமான ஒரு பூமியிலே எல்லா மதத்தவரும் சேர்ந்து ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் வாழ்கின்ற இயற்கையும் இறைவனும் இணைந்து வாழ்வின் ஆதாரங்களை அள்ளி கொடுக்கக்கூடிய இந்த பகுதியை மது என்கின்ற மதுப்பிரியர்கள் என்கின்ற பெயரில் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.

மது பிரியர்கள் காட்டுகின்ற காட்சிகள் அந்த இடத்தில் நடக்க முடியாதபடி பெண்கள் பள்ளிக்கூட குழந்தைகள் கல்லூரி செல்லும் பிள்ளைகள் வேலைக்கு செல்லும் மக்கள் யாருமே அந்த இடத்தை கடந்து போக முடியாதபடி அவர்களுடைய செயல்பாடுகள் மிக மோசமான ஒரு நிலைமையை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பல நாட்களாக பலமுறை பல வழிகளில் கோரிக்கைகள் வைத்தும் இதனை மாற்றுவதற்கு இந்த நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மதுக்கடையை மாற்றுபடும் என்பதற்காக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நம்முடைய கன்னியாகுமரியினுடைய சட்டமன்ற உறுப்பினர் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய மக்கள் பிரச்சனைக்கு முன்னிற்கக்கூடிய ஒரு நல்ல மனிதர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இதற்காக அவர் எங்களுடைய அமராவதிவிளை மக்களை அணுகிய பொழுது நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொல்லி பல நாட்களாக தொடர் போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் அமராவதிவிளை ஊரிலே கஞ்சி காச்சி எங்களுடைய ஒரு எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இன்று நிறைய பெண்கள் பின்னாடி இருக்கிறார்கள். நிறைய ஆண்கள் வேலைக்கு செல்லாமல் இருக்கிற அன்றாட வேலைக்கூலிகள் இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற இந்த பணம் ஒரு அற்பமான இந்த மதுவுக்காக போயிறது. குடும்பங்கள் மிக மிக வேதனைப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் இந்த மதுக்கடை நடத்துகின்ற உரிமையாளர்களுக்கும் மறுபடியுமாய் உங்களுக்கு ஒரு அழைப்பு தருகின்றோம். தயவு செய்து மதுக்கடையை இந்த இடத்திலிருந்து மாற்றுங்கள்.

எங்களுடைய மக்கள், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாய் இந்த இடத்தை கடந்து போக நீங்கள் உதவி செய்யுங்கள். நல்ல ஆட்சி என்கின்ற பெயரில் நல்லதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உங்களுடைய உதவியை நாங்கள் நாடி இருக்கின்றோம். எனவே இதோடு முடிந்து விடுவதில்லை. சரியான பதில் வரும் வரை இந்த போராட்டம் தொடரும். அதற்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆதரவு இருக்கும். அதற்காக மக்களாகிய நாங்களும் ஒத்துழைப்பு தருவோம் என்று கூறி உடனடியான தீர்வு தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார். 

கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பேரூர் செயலாளர்கள் இராஜபாண்டியன், மனோகரன், மணிகண்டன், கிளைச் செயலாளர் பிரவீன் சிங், கவுன்சிலர்கள் சிவகாமி, நாராயண பெருமாள், நிர்வாகிகள் சந்திரசேகர், பீட்டர், பால்துரை, சாமிநாடார், தேவதாஸ், வனிதா பால்துரை, சித்ராசெல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory