» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!

சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)



குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பிரிவில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மணலிக்கரை, புனித மரிய கொரட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசுகையில்-இன்றைய தினம் புனித மரிய கொரட்டி மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நீங்கள் குழந்தைகள் நாளை தலைவர்கள், மேதைகள் மற்றும் அரசு அலுவலர்களாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி குழந்தைகள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாக கூடாது என்பதற்காகவே தேடித்தேடி திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் பெருமை என்பதே தமிழ்நாடு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், உயர்கல்வி படிப்பதற்கு மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம், இத்திட்டத்தினை விரிவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

நம்முடைய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தான் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டியினை முதன்முதலாக வழங்கினார்கள். மாணவர்களாகிய உங்களுக்கு கிடைக்கும் முதல் சொத்து மிதிவண்டியாகும். நான் பள்ளிகளுக்கு செல்லும்போதெல்லாம் மாணவர்களுக்கு ஒரு காரியத்தை கூறி உற்சாகப்படுத்தி வருவேன். அது எதுவென்றால் நீங்கள் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க வேண்டும். அதைப்பற்றி நீங்கள் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் பேச கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா விஷயத்தை பற்றியும் பேச வேண்டும். தேவையான காரியங்களை முன்னிலைப்படுத்தி பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் காலநிலை மாற்றத்தினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகனங்களிலிருந்து வரும் புகையினால் காற்று மாசு அடைகிறது. ஆனால் நீங்கள் மிதிவண்டியை பயன்படுத்தும்போது இதுபோன்ற எந்த மாசும் ஏற்படாது. மிதிவண்டி ஓட்டுவதனால் முழு உடலுக்கும் நல்ல உடற்பயிற்சி ஆகும். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து சைக்கிள் ஒட்டி பள்ளிக்கு வரும்போது முழு உடலும் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும். சுறுசுறுப்பாக வகுப்பறைக்கு வந்தால் நம்மால் நன்றாக பாடம் கற்க முடியும். பள்ளிக்கல்விதுறைக்கு மட்டும் ரூபாய் 47 ஆயிரம் கோடியை நிதிநிலை அறிக்கையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் 140 அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் பனினொன்றாம் வகுப்பு பயிலும் 6544 மாணவர்களுக்கும் 7481 மாணவிகளுக்கும் என மொத்தம் 14025 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4900 மொத்த மதிப்பு ரூ.3,20,65,600/- (மூன்று கோடியே இருபது இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து அறுநூறு ஆகும். மாணவிகளுக்கா ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4760 மொத்த மதிப்பு ரூ.3,56,09,560/- (மூன்று கோடியே ஐம்பத்து ஆறு இலட்சத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று அறுபது ஆகும்.

இன்றைய நிகழ்ச்சியில் மணலிக்கரை, புனித மரிய கொரட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 232 மாணவர்களுக்கும். 103 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் நீங்கள் பெற்று, உயர்கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வாழ்க்கையில் இலக்கினை வைத்துக்கொண்டு, அந்த இலக்கினை நோக்கி செல்லும் போது உங்கள் வாழ்க்கை முன்னேறும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்கள்.

நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் எம்.சபினா, புனித மரிய கொரட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியை சாக்கர் மேரி டார்லிங், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory