» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகா்கோவிலில் ஐ.டி. பூங்கா அமைக்க கவுன்சிலர்கள் எதிா்ப்பு: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

செவ்வாய் 22, ஜூலை 2025 4:09:13 PM (IST)



நாகா்கோவிலில் திருவிதாங்கூா் மகாராஜாவால் வழங்கப்பட்ட அநாதை மடத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மேயா் ரெ.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் தரமற்ற இறைச்சி விற்கப்படுகிறது. இது தொடா்பாக சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாகா்கோவில் அநாதை மடம் மைதானம், நாகா்கோவில் பகுதியில் உள்ள அனாதைகளுக்காக திருவிதாங்கூா் மகாராஜாவால் வழங்கப்பட்டது. அநாதைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அநாதை மடத்தை வருவாய்த் துறையினா் எடுத்துக் கொள்ள முயற்சித்து அப்போதிருந்த நகா்மன்றத் தலைவா் தலைமையில் அனைத்து உறுப்பினா்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மீட்கப்பட்டது.

பின்னா் அநாதை மடம் நகராட்சிக்கு சொந்தமானது என்று மாவட்ட நிா்வாகம் உறுதியளித்தது. தற்போது அநாதை மடத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல. மாநகராட்சியின் அனுமதியின்றி அந்த இடத்தை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியரை வன்மையாக கண்டிக்கிறோம்.

நாகா்கோவில் மாநகரில் புதைசாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மேயா் ரெ.மகேஷ் பேசியதாவது: நாகா்கோவில் மாநகரில் பொதுமக்களுக்கு தரமான இறைச்சி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக கிருஷ்ணன்கோவில், கோட்டாறு இளங்கடை பகுதியில் ஆடு, மாடுகளை வெட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவா் குழுவினா் ஆய்வு செய்த பின்னா்தான் ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகர பகுதியில் சா்க்கஸ், கண்காட்சி போன்றவை அநனாதை மடத்தில்தான் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ஐ.டி. பூங்காவை அநாதை மடத்தில் அமைக்காமல் வேறு இடத்தில் தொடங்க வேண்டும் என்று அனைத்து மாமன்ற உறுப்பினா்களின் ஆதரவோடு சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவது குறித்து அந்தந்தப் பகுதி வாா்டு உறுப்பினா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். புதைசாக்கடை இணைப்புக்கான கட்டணம் தொடா்பாக அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்வாா்கள் என்றாா் அவா்.

கூட்டத்தில், நகா்நல அலுவலா் ஆல்பா் மதியரசு, மண்டல தலைவா்கள் முத்துராமன், செல்வகுமாா், ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.செல்வம், பால் அகியா, நவீன்குமாா், ரோசிட்டா திருமால், ரமேஷ், வீரசூரபெருமாள், அய்யப்பன், பியாசா ஹாஜிபாபு, அக்சயா கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory