» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.17 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:27:49 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னிலையில் கோணம், புன்னைநகர், வட்டக்கரை, இளங்கடை, வட்டவிளை, வலம்புரிவிளை, பெதஸ்தா வணிக வளாகம், தனியார் பேருந்து நிலையம் மற்றும் கிறிஸ்டோபர் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (05.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின்கீழ் நடைபெற்று வரும் மற்றும் நிறைவுற்ற பணிகள் என பல்வேறு பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் மூலத்தன நிதியின்கீழ் கோணம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் எதிரில் மாணவ மாணவியர்கள், வேலைநாடுனர்கள் போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவதற்காக இலவச பயிற்சி மையம் மற்றும் நூலகம் நடத்துவதற்காக ரூ.2.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. 

இப்புதிய கட்டிடத்தின் உறுதிதன்மை, அடிப்படை வசதிகள், பயிற்சி வகுப்பறைகள் மற்றும் புத்தகங்கள் வைப்பதற்கான அறைகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மையத்திற்கு வருகை தருபவர்கள் இயற்கையான சூழலில் கல்வி பயிலுவதற்கான கட்டமைப்பினை உருவாக்கி இம்மையத்தினை விரைவில் மாணவ மாணவிகள், இளைஞர்கள், போட்டி தேர்வாளர்கள், செயல்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செயலற்ற கணக்கு வட்டி நிதியின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு புன்னைநகர் பகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடி மதிப்பில் வட்டக்கரை ஏ.ஆர்.கேம்ப் பகுதியிலும் முடிவுற்ற தார்சாலை பணியினை ஆய்வு செய்ததோடு சாலையின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காவலர்குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் ஓடையினை ஆய்வு செய்து அவற்றில் தேங்கியுள்ள மணல்களை அப்புறப்படுத்திட மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் இளங்கடை ஆடடிப்புக் கூடத்தில் மாநகராட்சியின் பொது நிதியின் கீழ் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியினை ஆய்வு செய்யப்பட்டதோடு, அப்பணிகளை விரைந்து முடித்து வியாபாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு பயிற்றிவிக்கப்படும் கல்வி முறை மற்றும் உணவு குறித்து கேட்டறியப்பட்டது.

ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.47.60 இலட்சம் மதிப்பில் வட்டவிளை சூரியா நகர் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டதோடு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரூ.30 இலட்சம் மதிப்பில் பெதஸ்தா வணிக வளாகத்தில் முடிவுற்ற பின்புறம் நடைபெற்று வரும் பெதஸ்தா குளம் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.10.07 கோடி மதிப்பில் வலம்புரிவிளை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் பிரித்து உயிர்உரம் தயாரிக்கப்படுவதையும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்கில் பாதுகாப்பான முறையில் கையாளுவதோடு, பிற மாவட்டங்களுக்கு இப்குப்பைகளை எடுத்து எடுத்து சென்று உயிர்உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபடும்.

அதனைத்தொடர்ந்து, மூலத்தன நிதியின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் 11 கடைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் (ஆம்னி பஸ் நிலையம்) கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நடைபெற்று வரும் பணிகளின் தன்மை, தரம் உள்ளிட்டவைகள் பார்வையிட்டு கேட்டறியப்பட்டதோடு, இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள குப்பைகளை அன்றாடம் மட்கும் குப்பைகள் மற்றும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து தங்கள் பகுதிகளை நாடிவரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை தெருவோரங்களிலோ, கழிவுநீர் ஓடைகளிலோ, வடிகால் பகுதிகளிலோ. நீர்நிலைகளிலோ கொட்ட வேண்டாம். 

பொதுமக்கள் பொறுப்பில்லமால் மேல்குறிப்பிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதினால் மழைக்காலங்களில் கழிவுநீர் அடைப்பட்டு சாலைகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் கலந்து தொற்று நோய்கள் உருவாகிட வழிவகுக்கும். மேலும் மழைக்காலங்களில் வெள்ள அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் வழங்கி நமது மாவட்டத்தில் குப்பையில்லா மாவட்டமாகவும். பேரிடர் அபாயங்களிலிருந்து காத்திட உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.

ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பொறி.பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் தேவி கண்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory