» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!

சனி 10, மே 2025 10:57:29 AM (IST)



பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த 10,534 மாணவர்களும், 11,408 மாணவிகளும் என மொத்தம் 21,942 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,027 மாணவர்களும், 11,260 மாணவியர்களும் என மொத்தம் 21,287 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, உயர்கல்வி பயில உள்ளீர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் நீங்கள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளில் சேர்வது வரை உங்களுக்கு தேவையான திட்டங்களான நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், உயர்வுக்குப் படி போன்ற மாணவர் நலத்திட்டங்களின் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கேற்ப தமிழ்நாடு அரசு, மாணாக்கர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

தமிழ்நாட்டிற்குட்பட்ட அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ள இணையதள வாயிலான விண்ணப்பப் பதிவு 07.05.2025 முதல் 06.06.2025 வரை நடைபெறும். www.tneaonline.org என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு கட்டணம் OC/BC/BCM/MBC&DNC பிரிவினர்க்கு ரூ.500/- ம், SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/- ம் ஆகும். இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகையோ அல்லது கலந்தாய்வுக் கட்டணமோ எதுவும் இல்லை. இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் கோணம் பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லூரி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு அரசின் பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் செயல்படுகின்றன. பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக இணைய வழியில் இம்மையங்கள் வாயிலாக இலவசமாக விண்ணப்பிக்கலாம். இச்சேர்க்கை சேவை மையங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு முறையும் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான தேவையற்ற செலவினங்களை தவிர்க்கலாம்.

மேலும் தனியார் கணினி மையங்களில் பதிவு செய்தலின் போது பிழைகள் ஏற்படின், கணினி மையங்கள் மூலம் சரி செய்வது என்பது முடியாத ஒன்றாகும். கணினி மையங்களில் இணைய வழியில் பதிவு செய்யப்படும் போது ஏற்படும் தவறுகளுக்கு மீண்டும் இச்சேர்க்கை மையங்களின் வழியாகவே தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது. மேலும் கணினி மையங்களில் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யும் போது ஒவ்வொரு பதிவுக்கு கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இச்சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, தேவையற்ற அலைச்சல்கள், பணவிரயங்கள் தவிர்க்கப்படுகின்றன. சனி கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் இச்சேர்க்கை சேவை மையங்கள் செயல்படும்

தொடர்ந்து நாகர்கோவில் கோணம் பல்கலைகழக பொறியியல் கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லூரி ஆகிய மூன்று சேர்க்கை சேவை மையங்களின் IP Address , DOTE (Directorate of Technical Education) யோடு இணைப்பில் உள்ளதால், வழிகாட்டுதல் மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் தவறுகள் உடனடியாக சரி செய்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இச்சேவை மையம் செயல்படும். மேலும் விவரங்களுக்கு 9944252228 என்ற தொலைப்பேசியினை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். 

இதன் மூலம் மாணவர்கள் தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து சரியான வழிகாட்டுதலின் பேரில் சரியான விண்ணப்பங்களை பதிவு செய்திட பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை அணுகும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆதார் எண், 12ம் வகுப்பு தேர்வு பதிவெண், பெற்றோரின் ஆண்டு வருமான விவரம், வகுப்பு சான்றிதழ், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், முன்னுரிமை சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுசெல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory