» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!

செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

காவல்கிணறு அருகே குடும்ப பிரச்சினையால் இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்துக்கும், பணகுடி ரயில் நிலையத்துக்கும் இடையே காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதியதில் முகம் உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் அடைந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரது சட்டைப்பையில் ஒரு ஆதார் கார்டு இருந்தது. அது பிணமாக கிடந்தவரின் ஆதார் கார்டுதான் என்பது தெரிய வந்தது.

அதில் இறந்தவரின் பெயர் சந்திரமோகன் (வயது 70) என்றும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜப்புரை அருகில் உள்ள சித்ராநகர் பகுதியை சேர்ந்தவர் என்ற முகவரியும் இடம் பெற்றிருந்தது. போலீசார் இந்த முகவரியில் விசாரித்தபோது இறந்த சந்திரமோகன் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றியவர் என்பதும் தெரிந்தது.

பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சந்திரமோகன் தற்போது திருவனந்தபுரத்தில்தான் வசித்து வந்துள்ளார். அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது மகள்களுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு வந்த சந்திரமோகன் நேற்று முன்தினம் இரவு 7.15 மணி அளவில் காவல்கிணறு பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் தெரிவித்தனர்.

நேற்று சந்திரமோகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் பெற்று திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory