» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் 660 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவிககளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (16.09.2025) சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக சுயஉதவி குழுஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன்கள் வழங்கியதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன் முன்னிலையில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கடன் உதவிகள் வழங்கினார்.

விழாவில் அவர், பேசுகையில்- தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வங்கி கடனுதவிகள் பெற்றுத்தரப்பட்டு, பொருளாதார முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரூ.3500 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி காணொலி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டிற்கு ஊரகப் பகுதிகளில் செயல்படும் 4300 குழுக்களுக்கு ரூ.388 கோடியும், நகர்புரப் பகுதிகளில் செயல்படும் 6638 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.564 கோடி என மொத்தம் 10,938 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.952 கோடி வங்கி கடன் இணைப்பு ஏற்படுத்தி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 12.09.2025 வரை 3757 குழுக்களுக்கு ரூ.361.36 கோடி ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தினை சார்ந்த நகர்புரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள 553 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.62.77 கோடியும், 10 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளை சேர்ந்த 107 குழுக்களுக்கு வங்கி பெருங்கடனாக ரூ.14.50 கோடி என மொத்தம் 660 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் திருவாரூரில் நடைபெற்ற விழாவில் மகளிர்கள் எங்களுக்கு அடையாள அட்டை இல்லையா என்று கேட்டதற்காக ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட புகைப்படம் மற்றும் தேவையான சுய விபர ஆவணங்களை சேகரித்தார்கள். அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து இன்று பல இலட்சக்கணக்கான சுயதஉதவிக்குழு தாய்மார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டையை அரசு அலுவலர்கள் போன்று, உங்களது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அதன்ஒருபகுதியாக நமது மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 59,000 மகளிர்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் 75,000 மகளிர்கள் என மொத்தம் 1.34 இலட்சம் மகளிர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 174 குழுக்களை சார்ந்த 1288 மகளிர் சுய உதவிக்குழு உறுபினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுயஉதவிக்குழுவின் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களுடன் க்யூர்ஆர் கோடும் இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் அதாவது டாம்கோ வாயிலாக விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களின் மூலதன தேவையை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப் பொருட்கள் உபகரணங்கள் கருவிகள் இயந்திரங்கள் வாங்குவதற்காக இக்கடன் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள சுயஉதவிக்குழுவினர் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்றார்.

நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர்கள் கலைச்செல்வி, வளர்மதி, பாலசுந்தரம், தங்கராஜ், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory