» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக அரைசதம் அடித்து அசத்த இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் தயக்கமின்றி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. கழுத்து பிடிப்பில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய தொடக்க வீரர் சுப்மன் கில் (4 ரன்) அவசரகதியில் ஷாட் அடித்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12 ரன்)பவுண்டரி, சிக்சர் அடித்த கையோடு மீண்டும் ஒரு ஷாட் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு அபிஷேக் ஷர்மாவும், திலக் வர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் இவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அபிஷேக் ஷர்மா 17 ரன்னிலும் (12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), திலக் வர்மா 26 ரன்களிலும் (32 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 104 ரன்களுடன் தடுமாறிய நிலையில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை தூக்கி நிறுத்தினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் கேஷவ் மகராஜ், சிபாம்லா, நோர்டியா ஓவர்களில் சிக்சர்களை தெறிக்க விட்டார். 25 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 54 ரன்கள் திரட்டினர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும், லுேதா சிபாம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் மிரட்டினர். தொடக்க வீரர்கள் குயின்டன் டிகாக் ரன் ஏதுமின்றியும், கேப்டன் மார்க்ரம் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 12.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory