» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவோம்: சிஎஸ்கே கேப்டன் தோனி நம்பிக்கை

திங்கள் 21, ஏப்ரல் 2025 10:23:45 AM (IST)



"அடுத்து வரும் 6 போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம். ஒருவேளை முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராவோம்" என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறினார்.

சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 38வது லீக் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். வழக்கம் போல் சொதப்பலாக ஆடிய ரச்சின் 5 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.

பின் வந்த, சென்னை அணியின் புதிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, 8வது ஓவரின் கடைசி பந்தில் ரஷீத் (19 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து, ரவீந்திர ஜடேஜாவும், சிவம் துாபேவும் இணை சேர்ந்து ஆடினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், 13.3 ஓவரில் சென்னை அணி, 100 ரன்னை எட்டியது.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய துாபே, ஜடேஜா, 38 பந்துகளில் 50 ரன்களை கடந்தனர். இந்நிலையில், பும்ரா வீசிய 17வது ஓவரை எதிர்கொண்ட துாபே (32 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி, 50 ரன்), ஜேக்சிடம் கேட்ச் தந்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அதையடுத்து, ஜடேஜாவுடன், கேப்டன் எம்.எஸ்.தோனி இணை சேர்ந்தார். பும்ரா வீசிய 19வது ஓவரின் 4வது பந்தில் தோனி (4 ரன்) அவுட்டாகி வெளியேறினார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில், ஜஸ்பிரித் பும்ரா 2, தீபக் சஹர், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 177 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் கேப்டன் தோனி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பேட்டிங்கில் நாங்கள் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். நிச்சயமாக 2வது இன்னிங்ஸின் பாதியில் பனிப்பொழிவு வரும் என்பது தெரியும். உலகில் இன்று மிகச்சிறந்த டெத் பவுலராக பும்ரா இருக்கிறார். மும்பை அணி டெத் பவுலிங்கை கொஞ்சம் விரைவாகவே தொடங்கிவிட்டது.

சி.எஸ்.கே அணி விரைவாக ரன்களை சேர்க்க தவறிவிட்டது. மிடில் ஓவர்களில் இன்னும் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரே கொடுத்த தாக்கத்தை அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரேவை பொறுத்தவரை மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அவரின் ஷாட்களை சிறப்பாக செயல்படுத்தினார்.

நாங்களும் அவரின் ஆட்டத்தை பெரிதாக பார்த்ததில்லை. மும்பை அணி வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். நாங்கள் சராசரி ஸ்கோரையே அடிக்கவில்லை என்ற போது, அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்தால், ஆட்டம் நம் கைகளில் இருக்காது. இத்தனை சீசன்களாக .அணி சிறப்பாக செயல்பட்டதற்கு, நல்ல கிரிக்கெட்டை ஆடியதே காரணம். நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாடாதபோது முக்கியமானது என்னவென்றால், அதைப் பற்றி அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சரியான கிரிக்கெட்டை ஆடுகிறோமா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில கேட்ச்கள் பிடித்திருந்தால், முடிவுகள் மாறி இருக்கும். தற்போது சி.எஸ்.கே அணியில் உள்ள குறைகளை சரி செய்து வருகிறோம். அடுத்து வரும் 6 போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம். ஒருவேளை முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory