» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)
கோவை அருகே 13 வயது சிறுவனை கொலை செய்து விட்டு மர்ம நபர் கடத்திச் சென்றதாக நாடகமாடிய இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே வாய்க்காலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட சிறு தகராறில், 13 வயது சிறுவன் ஒருவன் சக நண்பர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலையை மறைத்துவிட்டு மாற்று நபர் கடத்திச் சென்றதாக நாடகமாடிய 15 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களைப் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை இருகூர் நியூ காலனியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மூத்த மகன் ரித்தீஷ் (வயது 13). 7-ஆம் வகுப்பு படித்து வந்த இவன், கடந்த மே 16-ஆம் தேதி தனது நண்பர்களான 15 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவருடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகேயுள்ள வாய்க்காலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளான். ஆனால், நீண்ட நேரமாகியும் ரித்தீஷ் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவனது பெற்றோர், ரித்தீஷுடன் சென்ற நண்பர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அச்சிறுவர்கள், "நாங்கள் மீன்பிடித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருடன் ரித்தீஷ் அவராகவே சென்றுவிட்டார்" என்று மிகச் சாதாரணமாகப் பொய் உரைத்துள்ளனர்.
மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியில் பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவசரப் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், சிறுவர்கள் கூறியபடி இருசக்கர வாகனத்தில் ரித்தீஷ் செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், ரித்தீஷின் நண்பர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறவே, போலீசார் தங்களது பாணியில் நடத்திய தீவிர விசாரணையில், இரு சிறுவர்களும் சேர்ந்து ரித்தீஷைக் கொலை செய்துவிட்டு, கடத்தல் நாடகமாடிய அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: "மூன்று சிறுவர்களும் வாய்க்காலில் மீன்பிடித்தபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன், அங்கிருந்த காலி மதுபாட்டிலை எடுத்து ரித்தீஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளான்.
இதில் ரித்தீஷ் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததும், கொடூரமான முறையில் அங்கிருந்த பெரிய கல்லைத் தூக்கி அவனது தலையில் போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரித்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். கொலை நடந்ததை உடன் இருந்து பார்த்த 13 வயது சிறுவன், பயத்தின் காரணமாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் கொலையை மறைக்க உடந்தையாக இருந்துள்ளான்.
இதையடுத்து, பலியான சிறுவன் ரித்தீஷின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக இரு சிறுவர்களும் நேற்று கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனின் தரக்குறைவான பேச்சு சபை நாகரிகமா? ஸ்ரீநாத் எம்.எல்.ஏ கண்டனம்!
செவ்வாய் 19, மே 2026 8:46:45 PM (IST)

திருச்செந்தூர் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி!
செவ்வாய் 19, மே 2026 8:01:39 PM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

அறுந்து கிடந்த மின்வயரால் தம்பதி, கல்லூரி மாணவர் பலி: ஆத்தூரில் பெரும் சோகம்!
செவ்வாய் 19, மே 2026 5:05:18 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)


