» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து ஊழியர் பலி - 5 பேர் படுகாயம்!!
செவ்வாய் 19, மே 2026 10:28:44 AM (IST)
தஞ்சையில், தனியார் உணவகத்தில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஊழியர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் ஏசி எந்திரத்திற்கு கேஸ் நிரப்பியபோது ஏற்பட்ட அழுத்தத்தினால் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் உணவக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஏசி மெக்கானிக் மற்றும் 3 ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த உணவகத்தின் சமையல் கூடத்தில் இருந்த ஏசி எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசியைச் சரிசெய்வதற்காக, நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன் (வயது 43) என்பவர் வரவழைக்கப்பட்டார்.
கணேசன் ஏசி எந்திரத்திற்கு கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சிலிண்டரில் ஏற்பட்ட கடுமையான காற்றழுத்தம் காரணமாக ஏசி எந்திரத்தில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சிலிண்டர் வெடித்த அதிர்வினால் அந்த உணவகக் கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கின. ஏசி எந்திரத்தின் இரும்புப் பாகங்கள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த மற்ற ஏசி எந்திரங்களும் முற்றிலும் சேதமடைந்தன. வெடிச்சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு எதிரொலித்ததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனர்.
இந்த விபத்தில் ஏசி மெக்கானிக் கணேசன் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார். அப்போது ஏசி பழுதுபார்க்கும் பணியை அருகில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த உணவக ஊழியர்களான பொன்னாவரை பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (வயது 27), திருவையாறு அருகே குழிமாத்தூரைச் சேர்ந்த சவேரியார் மகன் அருண்குமார் (வயது 26) ஆகியோர் மீது இரும்புப் பாகங்கள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.
மேலும், உணவகத்திற்கு வெளியே ஆர்டர்களுக்காகக் காத்திருந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (வயது 24), செங்கிப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரேம் (வயது 26) மற்றும் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித்குமார் (வயது 22) ஆகியோரும் இந்த வெடிவிபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக ஊழியர் ரவிராஜ், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்திற்குத் தஞ்சை டவுண் டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி மற்றும் விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனின் தரக்குறைவான பேச்சு சபை நாகரிகமா? ஸ்ரீநாத் எம்.எல்.ஏ கண்டனம்!
செவ்வாய் 19, மே 2026 8:46:45 PM (IST)

திருச்செந்தூர் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி!
செவ்வாய் 19, மே 2026 8:01:39 PM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

அறுந்து கிடந்த மின்வயரால் தம்பதி, கல்லூரி மாணவர் பலி: ஆத்தூரில் பெரும் சோகம்!
செவ்வாய் 19, மே 2026 5:05:18 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)


