» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: ரூ.80 லட்சத்தில் சுற்றுவேலி அமைக்கும் பணி தொடக்கம்!

திங்கள் 16, பிப்ரவரி 2026 8:05:06 PM (IST)


ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளின் முதற்கட்டமாக, 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளின் முதற்கட்டமாக, நிலத்தைப் பாதுகாக்கும் வகையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுவேலி அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக 'சைட் மியூசியம்' (Site Museum) இங்கு அமைக்கப்பட்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கனிமொழி எம்.பி. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், 2023 ஆகஸ்ட் 5-இல் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சமீபத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் மற்றும் சுற்றுலா மேம்பாடு குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்காலிகமாகத் தொய்வடைந்திருந்த பணிகள் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன.

அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை நில ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், இரும்பு வேலிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அறவாழி தலைமை தாங்கினார்.

இயக்குநர் அறவாழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "உள்ளூர் மக்களால் வழங்கப்பட்ட நிலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, முதற்கட்டமாக ரூ.80 லட்சம் செலவில் சுற்றுவேலி அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆதிச்சநல்லூர் 'சி' சைட் (C Site) பகுதியில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களைப் பாதுகாக்கும் வகையில், ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நவீன மேற்கூரைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்."

கலாச்சார மையம் என்பது வெறும் அருங்காட்சியகம் மட்டுமல்ல; அது தமிழர்களின் வீரஞ்செறிந்த கலாச்சாரத்தைப் பிரம்மாண்டமான முறையில் உலகிற்குப் பறைசாற்றும் மையமாக அமையும் என்றும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் பொறியாளர் சரவணன், துணை கண்காணிப்பாளர் ராணி மோல், பராமரிப்பு அலுவலர் சங்கர், தொல்லியல் துறை அலுவலர்கள் தயாநிதி, வெங்கடேஷ், அந்தோணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், சுப்பிரமணியன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த அருங்காட்சியகப் பணிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory