» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 10:14:41 AM (IST)

வரும் பிப்ரவரி மாதத்திற்கு பின்வசை பாடியவர்கள், குறை சொல்பவர்கள் வாழ்த்து பாடுகின்ற அளவிற்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆன்மிக பொக்கிஷமாக திகழும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் அறுபடை வீடுகள் காட்சியரங்கம், நாழிக்கிணறு புனரமைப்பு பணிகள், சூரசம்ஹார காட்சியரங்கம், சஷ்டி மண்டபம், விபூதி தயாரிப்பு கூடம், பஞ்சாமிர்த தயாரிப்பு கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,கடந்த ஆட்சியில் அதாவது 2021-க்கு முன்பு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வரைவின் கீழ், திருப்பணிகளை மேற்கொள்ள ஹெச்.சி.எல். என்ற தனியார் நிறுவனம் அனுமதி கோரிய நிலையில் 10 ஆண்டுகள் அனுமதி வழங்கப்படாமல் கிடப்பில் இருந்தது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஏற்பட்டவுடன் அந்நிறுவனம் அணுகியவுடன், அதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்பட்டது.
மாஸ்டர் பிளான் திருப்பணிகள் இரண்டு கட்டங்களாக அதாவது ஹெச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரு பகுதியாகவும், திருக்கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றொரு பகுதியாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் திரும்பி பார்க்கின்ற வகையில் கடந்த 07.07.2025 அன்று குடமுழுக்கு வெகு விமரிசையாக நடத்தப்பட்டதை எவரும் மறுக்க முடியாது.
மேலும். பக்தர்களின் வசதிக்காக அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு இணையாக ஏற்கனவே ஒரு படை வீடு திருச்செந்தூரில் அமைந்திருப்பதால் மீதமிருக்கின்ற ஐந்து படை வீடுகளையும் அமைகின்ற பணிகளும், இரண்டு சஷ்டி மண்டபங்கள், 500 நபர்கள் தங்குகின்ற வகையிலான டார்மண்ட்ரி அறைகளும், கூடுதல் சுகாதார வளாகங்கள், கழிவு நீரிலுள்ள கழிவுகளை அகற்றி மறுசுழற்சி செய்திடும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நாழிக்கிணறு புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த அனைத்து பணிகளையும் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவு செய்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான அறிவுரைகளை வழங்கியிருக்கின்றோம்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பொறுத்தளவில் ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்று பரப்புரை மேற்கொள்ளுகின்ற விஷமத்தன பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுகின்ற ஒரு கோயிலாக திருச்செந்தூரில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பெருந்திட்ட வரைவு அமையும் என்று நம்புகின்றோம். இந்த ஆட்சியின் மீது வசை பாடியவர்கள், குறை சொல்பவர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு வந்து பார்த்து வாழ்த்து பாடுகின்ற அளவிற்கு இந்த முருகன் திருக்கோயில் ஒரு பொக்கிஷமாக திகழும்.
திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பக்தர்களின் தேவைகளுக்கேற்ப கூடுதலாக திட்டமிட்டு, அதாவது இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு என்ன தேவையோ அதையும் கட்டமைக்கின்ற பணியிலே ஈடுபட்டு இருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் பெருந்திட்ட வரைவின் கீழ், திருச்செந்தூர், பழனி, கன்னியாகுமரி, மருதமலை திருத்தணி என 19 திருக்கோயில்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அனைத்து திருக்கோயில்களின் பணிகளும் நிறைவு பெறுகின்ற போது உண்மையான ஆன்மிக மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ளகின்ற நிலை உருவாகும்.
சஷ்டி விழாவின் போது தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அந்த இடங்களில் நிரந்தர பேருந்து நிலையங்களை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது இறுதி கட்டப்பணி பேருந்து நிலையம் தான். அந்த பணியும் நிறைவுறும் போது பக்தர்களுக்கு அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அமையும் என்று நம்புகிறோம். சுமார் 66 ஏக்கர் நிலப்பரப்பிலே அமைந்திருக்கின்ற இந்த திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி தருவோம்.
இத்திருக்கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதியினை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கியவுடன் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றார்கள். நீதிமன்றமும் ஆன்லைன் எப்படி செய்யப் போகின்றனர் என்ற கருத்துருக்களை முழுமையாக பெறாமலே தடை கோரி வந்திருக்கிறீர்கள், ஆகவே எந்த விதமான தடையும் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
திருக்கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு நாங்கள் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் தடைகளை ஏற்பட்டுவதற்கு ஒருபுறம் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தடைகள் பல உண்டு என்றாலும் அதை தகர்த்தெறிந்து பக்தர்களுடைய தேவைகளை நிறைவு செய்கின்ற திறன்மிக்க தோள்களும், மதிநுட்பமும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உண்டு என்ற வகையில் தடைகளை தகர்த்து தான் இந்த பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். செய்தியாளர்கள் கோரியது போல் ஆன்லைன் வசதிகள், பிரேக் தர்ஷன் போன்றவற்றை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசியினை கொண்டு செல்கிறார்களே என்று கேட்டீர்கள். ஒரு அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தி நிறுத்தி விட முடியாது. பக்தர்களுக்கும் அதில் அக்கறை இருக்கின்றது. அவர்களும் சட்டத்தை மதித்து இது போன்ற சூழல்களில் பிறப்பிக்கிறப்படுகின்ற உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்று துறையின் அமைச்சர் என்ற முறையில் அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் முனைவர் துரை.இரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கௌதம், இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, மண்டல இணை ஆணையர்கள் எம். அன்புமணி, கவிதா பிரியதர்ஷினி, திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் கே.ராமு, திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கமாரி, துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

தமிழகத்தில் 9-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 4:59:17 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; விஜய் 2-ம் இடம்: லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள்!
சனி 3, ஜனவரி 2026 3:56:49 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு விவரம்!!
சனி 3, ஜனவரி 2026 3:25:18 PM (IST)

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நன்றி
சனி 3, ஜனவரி 2026 3:11:17 PM (IST)

