» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்: மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்

சனி 3, ஜனவரி 2026 5:04:50 PM (IST)

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது மதுவிருந்துடன் புத்தாண்டு கொண்டாடிய 4 மருத்துவர்கள், மருந்தாளுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

மக்கள்Jan 3, 2026 - 09:49:10 PM | Posted IP 104.2*****

வாயால் அடிங்க , அது அரசு சத்துப்பானம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory