» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!

புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி கோவில்பட்டியில் இருந்து, தென்காசியின் திருமலை கோயில் நோக்கி தனியார் பேருந்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலை புறப்பட்டது. இதே போல தென்காசியில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் எனும் கிராமத்தில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கன.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வேக கட்டுப்பாட்டை பின்பற்றாமல், அதிவேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளது. அதேபோல விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். உயிரிழந்த 8 பேரில், மாற்றுத்திறனாளி இளம் பெண்ணின் தாயும் ஒருவர். 

இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயினுடைய பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். தற்போது தாய் உயிரிழந்த நிலையில் அவருடைய எதிர்காலம் கேள்விக்குள்ளானது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் விரைவில் வழங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory