» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பற்களை பிடுங்கியதாக வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

சனி 22, நவம்பர் 2025 8:49:41 AM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தது குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் தன் மீதான வழக்கையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக்கோரி ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, பல்வீர்சிங் மீதான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஷமீம் அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் நெல்லை மாவட்டத்தில் பணியில் இருந்தபோது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாண்டு ரவுடியிசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் பதிவு செய்த வழக்கையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.

பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, மனுதாரர் பல்வேறு நபர்களை கடுமையாக துன்புறுத்தி உள்ளார். அவரது கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதாடினார். இதைதொடர்ந்து நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டின்பேரில் தமிழில் விசாரணை நடத்தி தமிழ்மொழியில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

வடமாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் பணியாற்றியதால், தமிழில் புலமை பெற்றிருக்க வாய்ப்பில்லை. இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது, என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory