» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் 25 க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன : உதயநிதி விமர்சனம்

புதன் 8, அக்டோபர் 2025 4:54:42 PM (IST)



அதிமுகவில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் , பேரறிஞர் அண்ணாவின் வழியில் தனது 2026 தேர்தல் பயணத்தை 09.09.2025 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் இல்லத்தில் வணங்கி தொடங்கினார். இந்த பயணம், கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கும், அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். 

இதன் ஒரு பகுதியாக, அவர் மாவட்டம்தோறும் பயணம் மேற்கொண்டு, அனைத்து நிலைகளிலும் உள்ள கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகளை சந்தித்தார். கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் சாதனைகளும் தமிழ்நாட்டின் முடல்-அமைச்சர் ஒவ்வொரு தொகுதியையும் பார்த்துப் பார்த்து செயல்படுவதால், இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் (கிட்டத்தட்ட 11% வளர்ச்சி) டபுள் டிஜிட் அடைந்து, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

பெரியப்பட்டி பகுதியில் அடியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், தொகுதி முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள், அரசு கலைக்கல்லூரிக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள், திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டடங்கள் கட்டபட்டுள்ளன. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பிடிக்காத மத்திய பாஜக அரசு, இங்குள்ள "அடிமைகளுடன்" சேர்ந்து பல சதிகளில் ஈடுபடுகிறது. 

நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களின் உரிமைகள் அத்தனையும் பறிக்கின்ற வேலையை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மிக முக்கியமாக, மக்களவைத் தொகுதிகளைக் குறைத்து மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளை 32 தொகுதிகளாகக் குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக இந்தியாவிலேயே நம்முடைய முதல்-அமைச்சர் திகழ்கிறார்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை (NEP) கொண்டு வர முயன்றபோது, குறுக்கு வழியில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்கவும், குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் முயன்றது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேரடியாக, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பள்ளி கல்வித்துறைக்கான 2500 கோடி ரூபாயை வழங்குவேன் என்று கூறினார்.

இதற்கு முதல்-அமைச்சர் "நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், தமிழ்நாட்டிற்குள் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பையும், குலக்கல்வி திட்டத்தையும் மீண்டும் அனுமதிக்க மாட்டேன்" என்று கூறி சட்டப் போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டத்தின் மூலம் நம்முடைய கல்வி உரிமை வென்று, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை அளித்தது.

நீட் தேர்வு, வரி பகிர்வில் பாரபட்சம், இந்தி திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு மறுப்பு என தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் தான் முதல் ஆளாக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.

"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று திமுக பேசினால், கவர்னர் ஆர்.என். ரவி "யாரோடு போராடப் போகிறீர்கள்? யாரை வெல்லுவீர்கள்?" என்று கேட்கிறார். ஆர்.என். ரவி அவர்களே, கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாடு உங்களுடன் தான் போராடி வருகிறது. சட்டசபையில் எந்த கோப்பை அனுப்பினாலும் கையெழுத்துப் போடாமல் இருக்கும் கவர்னரை எதிர்த்து சட்டபூர்வமாக நம்முடைய தலைவர் வெற்றி பெற்று வருகிறார்.

அதிமுகவில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன. திருச்சியில் மட்டும் மூன்று அணிகள் தனியாக இயங்குகின்றன. நான்கு மாதங்களுக்கு முன் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, இன்று அதே வாயால், "எப்பவுமே பாஜகவுக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன்" என்று சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி காரை மாற்றுவதும், காலை மாற்றுவதும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதாவின் கால், சசிகலாவின் கால், டிடிவி தினகரனின் கால், இப்போது நிரந்தரமாக மோடியின் காலில் சரணடைந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இன்று அவரை செல்லமாக "முகமூடி பழனிச்சாமி" என்றுதான் அழைக்கிறார்கள்.

டெல்லி சென்று திரும்பும்போது திருட்டுத்தனமாக முகத்தை மூடி வந்தது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வியர்த்தது" என்று அவர் கூறியதாகவும், ஆனால் உண்மையில் "கண்ணு வேர்த்திருக்கும்" தற்போது அவர் தொடங்கிய பிரசாரத்தில் கூட்டம் ஆரம்பத்தில் இருந்ததை விடப் பாதியாகக் குறைந்துவிட்டது.

திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 10,000 முகாம்கள் என்ற இலக்கில், 8000 முகாம்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இதுவரை 18 லட்சம் மனுக்களில் 12 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு மாநில அரசும் செய்யாத சாதனை.

'காலனி' என்ற பெயர் கொண்ட குடியிருப்பு பெயர்களை மாற்ற நம்முடைய தலைவர் அவர்கள் அரசாணையை வெளியிட்டுள்ளார் என்றும், விரைவிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கழகத்தின் ஆணிவேர் கிளைச் செயலாளர்கள்தான். பூத் கமிட்டி நிர்வாகிகள் தான் "கழகத்துடைய ஸ்டெத்தஸ்கோப்". அவர்கள் தான் மக்கள் மனதிலே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு குடும்பத்துடனும் அறிமுகமாகி, அரசின் திட்டப் பலன்களை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் அவர்களே துவங்கி வைப்பார்.

இளைஞர்களுக்கு கழகத்தில் கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வட்ட, கிளைக் கழகம் வரை இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மூத்த முன்னோடிகள் இளைஞர்களை வழிநடத்தி, அவர்களுக்குக் கழக வரலாற்றையும் கொள்கைகளையும் சொல்லித் தர வேண்டும்.

தலைவர் அவர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார். அடுத்த ஐந்து மாத காலம், கழக உடன்பிறப்புகள் அனைவரும் இதே உணர்வோடு களத்தில் நின்று பிரசாரத்தில் ஈடுபட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக அணி நிச்சயமாக வென்று காட்டும். அந்த 200-க்கு முதல் தொகுதியாக இந்த ஸ்ரீரங்கம் தொகுதி நிச்சயமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

இதுOct 9, 2025 - 12:09:19 PM | Posted IP 104.2*****

எதனை அணிகள் இருந்தாலும் உனக்கென்ன வெண்ண.. ஒண்ணுமில்லாத திருட்டுக் குடும்பம்.

KatkOct 8, 2025 - 05:04:28 PM | Posted IP 172.7*****

அதிமுகவில் எத்தனை அணிகள் வேண்டுமானாலும் இருக்கட்டும் உங்களுக்கு தைரியம் தெம்பு திராணி இருந்தால் இருந்தால் தனியாக போட்டியிடு அதிமுக தனியாக போட்டியிடும் முடியுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory