» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!

வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

கோவை உயர்மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை வைத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மேம்பால கட்டுமானம் ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், "இப்போது நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். சொந்த ஊரில் இருப்பது பெரிய விஷயமா? என்று கேட்பீர்கள். நான் ஒரு படப்பிடிப்பிற்காக கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறேன். அந்தப் படத்தின் பெயர் ஜி.டி நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி ஜி.டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்கிறோம். இதில் ஜி.டி நாயுடுவாக என்னுடைய அன்பு நண்பர் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார்.

நான் ராமையா பிள்ளை என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி நாயுடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிற இதே நேரத்தில் ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஜி.டி நாயுடு அவர்களின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார். ஒரு கோயம்புத்தூர்க்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி நாயுடு குடும்பத்தாருக்கும் எங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory