» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயிகளின் வருமானம் குறையாமல் உற்பத்தி திறன் பெருக வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத்

செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:34:22 PM (IST)



நமது விவசாயிகளின் வருமானம் குறையாமல், உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் வேளாண் உற்பத்தி திறன் பெருக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் - வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (SEEPERS-ATMA) அட்மா திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பெருவிழா, அங்கக வேளாண்மை (Organic Farming) கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (07.10.2025) கிள்ளிகுளம், வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு அரசு உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இயற்கை வேளாண்மை அல்லது உயிர்ம வேளாண்மை என்ற அடிப்படையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூச்சி கொல்லியின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஆரம்பகாலத்தில் பூச்சி கொல்லி மருந்து நல்ல முறைக்காக கண்டுபிடிக்கப்பட்டது. பிற்காலத்தில் பூச்சிகளை கட்டுபடுத்துவதற்காக தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகள் கட்டுபாடு இல்லாமல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு, இறுதியாக உணவிலும் விஷத்தன்மை கலக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 

பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாது, மேலாண்மை தான் செய்ய முடியும் என்ற புரிதல் இக்கருத்தரங்கு மூலம் ஏற்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் பொழுது மனிதனின் உடலிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக அதற்கு இணையான இயற்கை உரங்களை கண்டுபிடித்து அதனை பயன்படுத்த வேண்டும். அதிலும் பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. 

1960 காலகட்டத்தில் நமது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. நமது உணவு தேவைக்காக பிற நாடுகளை எல்லாம் சார்ந்திருக்கக்கூடிய கட்டாயம் இருந்தது. எனவே, உணவு தேவைக்கான முதன்மை காரணத்தினால் இயற்கை வேளாண்மை என்ற முறையிலிருந்து மாறி செயற்கை உரங்கள் மற்றும் செயற்கை பூச்சிக் கொல்லி பயன்பாடு என்ற நிலைக்கு வந்தோம். பசுமை புரட்சி விளைவின் காரணமாக பல்வேறு ஆண்டுகளில் மென்மேலும் தீவிரமடைந்து, இறுதியாக பூச்சி கொல்லி மருந்து மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்துகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, அந்த காலகட்டத்தில் வேளாண்மையின் மீதிருந்த மனபான்மையின் காரணமாக நமது மக்கள் பசியுடன் பணிக்கு செல்லக் கூடாது, குழந்தைகளுக்கு முழுமையான உணவு கிடைக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்துடன், இன்றைய காலத்தில் பசியாற்றக்கூடிய அளவிற்கு போதிய அளவிலான உணவினை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அந்த உணவு தரமானதாகவும், எந்தவிதமான இரசாயன பொருட்களும் இல்லாமல் நமது உடலுக்கு பாதிக்காத வகையில் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்? அதனை இயற்கை வேளாண்மை மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

வேளாண்மை மனப்பான்மை மாற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளாக தான் தொடங்கி இருக்கிறது. இதற்கு முன்னர் இயற்கை வேளாண்மையில் முன்னோடியாக இருந்த நம்மாழ்வார் அவர்களின் காலகட்டத்தில் தான் இயற்கை வேளாண்மை பற்றிய மிகப் பெரிய புரிதலை விவசாயத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்கள். அவரும் வேளாண்மையில் அறிவியல் பூர்வமான வேளாண் ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகளுடன் தொடர்ந்து ஏற்படுத்தி, அந்த ஆராய்ச்சிகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்கருத்தரங்கின் மூலம் உங்களுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் உயிர்ம வேளாண்மையை நோக்கி முன்னெடுத்து வருகிறோம். 

விவசாயிகள் உயிர்ம வேளாண்மைக்கான ஆலோசனைகளையும் பின்பற்றிக் கொண்டு உணவு உற்பத்தி செய்கின்ற பொழுது எதிர்கால சந்ததியினர்களுக்கு உணவு உற்பத்தி செய்கின்ற திருப்தி கிடைக்கும். இயற்கை வேளாண்மை அல்லது உயிர்ம வேளாண்மையை பயன்படுத்துகின்ற பொழுது விளை பொருட்கள் குறைந்து, வருமானமும் குறைகின்ற நிலை ஏற்படுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். இயற்கை வேளாண்மைக்கான திடீர் மாற்றம் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். 

படிப்படியாக இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதிய நுட்பங்களை ஏற்றுக் கொண்டு, சாத்தியமான விஷயங்களை பின்பற்ற தொடங்கி, இரசாயன பயன்பாடு, பூச்சி கொல்லி பயன்பாடுகள் ஆகியவற்றை குறைத்து, உயிர்ம வேளாண்மையை விவசாயிகள் தொடர முடியும். உயிர்ம வேளாண்மையை தொடர்வதற்கான நுட்பங்களை பின்பற்றி, குறைவான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, அதிகமான மகசூல் தரக்கூடிய பூச்சிகளை தாங்கக்கூடிய ரகங்களை புதிதாக கண்டறிந்து விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கு உகந்த புதிய இரகங்களை எடுத்து விவசாயிகளுக்கு தர வேண்டும். ஏற்கனவே உள்ள பாராம்பரிய விதை இரகங்களை எல்லாம் சேகரித்து, அதனையும் ஆராய்ச்சி செய்து, சிறந்த இரகங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பொழுது, நமது விவசாயம் புகழ் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி பல்கலைகழகம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 50 – 60 ஆண்டு காலமாக மேற்கொண்ட பங்களிப்பின் காரணமாக தான் பல்வேறு விதமான புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கிடைத்திருக்கிறது.

அதன் முக்கிய பகுதியாக நமது மாவட்டத்தில் உள்ள கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி முக்கிய பங்காற்றுகிறது. இன்றும் பல்வேறு விதமான புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்குவதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, நமது பகுதிக்கு உகந்த பல்வேறு புதிய இரகங்களை உருவாக்கி தர வேண்டும். 

அது சுற்றுக்சூழலுக்கு உகந்த, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கின்ற வகையில் அமைய வேண்டும். அதன்மூலம் நமது விவசாயிகளின் வருமானம் குறையாமல், உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் வேளாண் உற்பத்தி திறன் பெருக வேண்டும். இந்நிகழ்வின் மூலம் இயற்கை வேளாண்மையை குறித்த அனுபவங்களை இங்குள்ள விவசாயிகள் அறிந்து கொண்டு, மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும். இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் திரளாக கலந்துகொண்டனர். உணவில் தன்னிறைவு அடைவதுடன், மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைத்து, அதன் மூலம் நோய் நொடியற்ற ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலையும் மண்வளத்தையும் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு வழங்கும் நோக்கத்துடன் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெற்றது. 

இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்கள் மற்றும் உயிர்ம வேளாண்மை தொடர்பான விவரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விவசாய பெருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாய பெருமக்களும் திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர். விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம் உயிர்ம வேளாண்மை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது. விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் அங்கக வேளாண்மை செய்யும் முன்னோடி விவசாயிகளின் அனுபவப்பகிர்வு ஆகியவை விவசாயிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது. உயிர்ம வேளாண்மை தொடர்பான விவரங்கள் கொண்ட பிரசுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.பெரியசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி மையம் மற்றும் உழவர் நலம்) மனோரஞ்சிதம், தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை மகேஷ், கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதல்வர் தேரடிமணி, அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory