» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!

ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

அரசு துறைகளில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.62 லட்சம் சுருட்டிய தூத்துக்குடி போலி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன் (45). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் "நான் கார் டிரைவராக வேலை செய்து வருகிறேன். அதில் போதுமான வருமானம் இல்லை. அரசு துறையில் டிரைவர் வேலைக்காக முயற்சித்து வந்தேன். அப்போது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கபாலி (53), என்பவரும் அவரது மனைவி செல்வி (45) என்பவரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். 

காவல் துறையில் டிரைவர் வேலைவாங்கி தருவதாக ஆசை காட்டினார்கள். தங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகளை தெரியும் என்றும் கூறினார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவரை எனக்கு அறிமுகம் செய்தார்கள். அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், அவர்மூலம் காவல் துறையில் டிரைவர் வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.

கருப்பசாமி சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் பந்தாவாக இருந்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் எனக்கு ஆயுத படையில் டிரைவர் வேலை வாங்கிதருவதாக உறுதியளித்தார். இதேபோல ஆயுத படையில், நிறைய பேருக்கு தன்னால் வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். என்னிடம் டிரைவர் வேலைக்கான விண்ணப்பப்படிவம் வாங்கிகொண்டு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார். என்னை வெளியில் நிற்கவைத்துவிட்டு, கருப்பசாமி மட்டும் கமிஷனர் அலுவலகத்துக்குள் சென்றார்.

என்னுடைய விண்ணப்ப மனுவை உயர் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் டிரைவர் வேலை கிடைத்து விடும் என்றும், அவர் கூறினார். ஒரு வாரம் கழித்து டிரைவர் வேலைக்கான உத்தரவு நகல் என்று ஒரு சான்றிதழை என்னிடம் கொடுத்தார். விரைவில் உங்களை வேலைக்கு கூப்பிடுவார்கள் என்றும் என்னிடம் கூறினார். அதை உண்மை என்று நம்பி ரூ.5 லட்சம் கொடுத்தேன்.

இதேபோல மேலும் 19 பேருக்கு போலீஸ் ஆயுதபடையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அவர்களிடமும் பணம் வசூலித்து ரூ.62 லட்சம் கருப்பசாமியிடம் கொடுத்தேன். என்னை யாரும் வேலைக்கு அழைக்கவில்லை. கருப்பசாமி கொடுத்த வேலைக்கான உத்தரவு நகலை கமிஷனர் அலுவலகத்தில் காட்டினேன். அது போலியானது என்று தெரிய வந்தது.

சப்-இன்ஸ்பெக்டராக வந்த கருப்பசாமியும் மோசடி ஆசாமி என்று தெரியவந்தது. மொத்தமாக ரூ.62 லட்சம் கொடுத்து நாங்கள் ஏமாற்றப்பட்டோம். போலி சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மீதும், அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கபாலி மற்றும் அவரது மனைவி செல்வி மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா துணை கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஞான சித்ரா இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். போலி சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கபாலி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இதுபோல் ஏராளமானவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கருப்பசாமி 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் சென்னையில் சுற்றுலாத்துறையில் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். கபாலி ஆட்டோ டிரைவராக உள்ளார். கருப்பசாமியும் கபாலியும் நண்பர்கள். கருப்பசாமியிடம் இருந்து போலியான சப்-இன்ஸ்பெக்டர் சீருடைகள், போலியான பணி நியமன ஆணை நகல்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

வேலை இல்லாதவன்Oct 12, 2025 - 03:05:24 PM | Posted IP 104.2*****

அந்த போலி போலீஸ் படத்தை வெளியிடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory