» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விரைவில் சந்திப்பேன்: கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல்!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 3:40:02 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காணொலி வாயிலாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தவெக மாவட்ட நிர்வாகிகள் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் அடுத்த ஏமூர் புதூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அருக்காணியின் வீட்டிற்கு இன்று காலை சென்ற தவெக நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், தவெக நிர்வாகியின் செல்போனுக்கு தொடர்புகொண்ட விஜய், காணொலிவழியாக அருக்காணியின் மருமகன் சக்திவேலிடம் பேசினார்.

அப்போது, ”உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட ஒருவரின் இழப்பு என் மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. இப்போது சட்ட திட்டங்கள் எனக்கு எதிராக இருப்பதால் உங்களை நேரில் வந்து சந்திக்க முடியவில்லை. விரைவில் உங்களை வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து எப்போதும் உங்களுக்கு உதவி செய்பவனாக இருப்பேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த நெரிசலில் பலியான தனுஷ் குமாரின் தாய் உமா மகேஸ்வரி மற்றும் அவரது சகோதரி ஹர்ஷினி ஆகியோரிடமும் காணொலிவழியாக விஜய் பேசியுள்ளார். மேலும், பிரசாரக் கூட்டத்தில் பலியான 25 -க்கும் மேற்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிய விஜய், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory