» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி: முதல்வர், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 8:47:57 AM (IST)


சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனையின் டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் டாக்டர்களின் ஆலோசனையின்படி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் அனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மூத்த இதயவியல் நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலுவின் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது உடல்நிலை குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று தனது விருப்பத்தை அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்தார்.

இதையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்தும் அவரது உறவினர்களிடம், மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பதிவில், ‘‘தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய டாக்டர் ராமதாசை சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், டாக்டர் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் ஆகியோரும் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தனர்.

வைகோ - சீமான் சந்திப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனைத்தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனையில் வைகோவை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory