» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் தந்தையை மகன் இழுத்துச் சென்ற சம்பவம்: ஊழியர்கள் சஸ்பெண்ட்!

புதன் 10, செப்டம்பர் 2025 5:19:32 PM (IST)

கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் கொடுக்காததால், தந்தையை மகனே இழுத்துச் சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வயதான தந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த அவரது மகன், அங்குள்ள பணியாளர்களிடம் வீல் சேர் கேட்டும் தராததால் அவரை கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் வடிவேல் (84), சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆழமான கால் புண்ணிற்காக கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடிவேலை சிகிச்சைக்காக அவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல அங்கு வீல் சேர் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் வீல் சேர் உடனே வேண்டும் என்றால் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் வீல் சேர் ஏதும் வராததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மகன், வடிவேலை தூக்க முடியாமல் கை தாங்கலாக இழுத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு வீல் சேர் வழங்காததால் தந்தையை மகன் இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விசாரணை நடத்தினார். ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர்கள் எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகிய இருவரையும் 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் வரவில்லை. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம். லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது என்று மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory