» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே மையத்தில் 167 பேர் பிளஸ் 2 வேதியியலில் 100 மதிப்பெண் : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
வெள்ளி 16, மே 2025 5:09:35 PM (IST)
செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தேர்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இந்நிலையில், செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், முழுமூச்சாக படித்து தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மன உளைச்சலில் இருந்தனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்றும் புகார் எழுந்தது.
இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "இவ்வளவு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்கள், நன்றாக படித்த மாணவ, மாணவிகளுக்கு யாரும் கிரெடிட் கொடுப்பதில்லை. எல்லோரும் சந்தேகப் பார்வையுடனே எங்களை பார்க்கின்றீர்கள். கடந்த ஆண்டும் இதே பள்ளியில் இப்படியான சிறப்பான ரிசல்ட் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் 104 பிள்ளைகள் 91 முதல் 94 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். அதையும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
வேதியியலில் 100 மதிப்பெண் பெற்ற 167 குழந்தைகளும் மற்ற பாடங்களிலும் 90, 98 என மதிப்பெண் பெற்றுள்ளார்கள். இருப்பினும் எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் கேள்வியை முன்வைத்திருப்பதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதேபோல், முதன்மை கல்வி அலுவலர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறும்போது, "செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 414 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என 167 பேர் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்கள். பிளஸ்-1 பொதுத் தேர்வில் சிறந்த விளங்கியவர்கள். பிளஸ்-2 வகுப்பில் குறுந்தேர்வு நடத்தி சிறந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மாநில அளவில் 3,181 மாணவ - மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இயற்பியல் பாடத்தைக் காட்டிலும் வேதியியல் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியிருந்தனர். தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும் படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேர்வு மையங்களில் துணை இயக்குநர் குழந்தைராஜன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
வெள்ளி 16, மே 2025 5:45:37 PM (IST)

10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: மே 19ல் தற்காலிக சான்றிதழ்!
வெள்ளி 16, மே 2025 5:24:52 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
வெள்ளி 16, மே 2025 3:57:59 PM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!
வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 16, மே 2025 12:40:51 PM (IST)
