» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கப் புதிய உத்தி: திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம்!

வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் "குமரி திருவிழா" நிகழ்ச்சிகள் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 5 நாட்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளன.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அவர்கள் மீண்டும் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களுக்கு வந்து கண்டுகளிக்கும் வகையிலும் கன்னியாகுமரி, முட்டம், லெமூர் கடற்கரை, பேச்சிப்பாறை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க "பெருவிழா நம்ம குமரி திருவிழா" என்ற மையப்பொருளைக் கொண்டு 5 நாட்களுக்குப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழா நாட்கள் ஒவ்வொன்றிலும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் உள்மாநில மற்றும் அயல்மாநிலக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பல்வேறு கலை வடிவங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

நடைபெறவுள்ள இம்மாபெரும் திருவிழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த ஐந்து நாள் திருவிழாவில் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, குமரி திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (RDO) எஸ்.காளீஸ்வரி தலைமையில் துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory