» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால் த.வெ.க.வில் சேர்ந்தார். பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணியும் இணைந்தார்.
த.வெ.க.வானது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்த பிறகும், த.வெ.க. மீது நம்பிக்கை இல்லாமல் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு செல்லவில்லை. இதனால், சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தனித்தே களம் கண்டது.
ஆனால், தேர்தல் முடிவின்போது, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு த.வெ.க. 108 இடங்களை பெற்று முதன்மை கட்சியாக வலம் வந்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றன. கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், த.வெ.க.வின் எதிர்பாராத வளர்ச்சியினால் பாரம்பரியம் மிக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளன என்றால் அது மிகையல்ல. இதனால், அ.தி.மு.க.வில் இருந்து பெரும்பாலானோர் இப்போது த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.
கடந்த 6-ந் தேதி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை த.வெ.க.வில் இணைந்துக்கொண்டனர்.
அந்த வகையில் நேற்றும் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர்.
அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் நா.பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவி, நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாநில பொருளாளர் ஜான் மகேந்திரன், முன்னாள் சமூக நலவாரிய உறுப்பினர் ஜெயதேவி, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, இணை செயலாளர் சி.கே.துளசி தாஸ், துணை செயலாளர் பாண்டுரங்கன், அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் பிரகதீஷ்வரன்,
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமகுடி முருகேசன், தி.மு.க. மாநில துணை செயலாளர் வெங்கடேசன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேலன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சம்பத், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் துளசிங்கம், தி.மு.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகி பிஷப் ஜோஸ்வா இம்மானுவேல்,
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, இளைஞர் அணி துணைத்தலைவர் மகேந்திரன், பிரசார குழு தலைவர் நடிகர் ரவி, திருப்பூர் மகளிரணி நிர்வாகி ஜெகதீஸ்வரி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நெல்லை அறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.சிந்தாவதார், செயலாளர் முகமது ஆஷீப், விழுப்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் செண்பகவேலு, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரீத்தி ஷெட்டி உள்பட ஏராளமானோர் நேற்று தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏ.க் கள் அருள் பிரகாசம், வி.எஸ்.பாபு, கருப்பையா, நவல்பட்டு விஜி, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)


