» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவின் முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்கும் இரணியல் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கான அத்தியாவசிய அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் எனத் தெற்கு ரயில்வேக்குக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் சர்வதேச மருத்துவமனை, பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் மணவாளக்குறிச்சி மணல் ஆலை போன்ற முக்கிய இடங்களுக்கு முதன்மை நுழைவாயிலாக இந்த ரயில் நிலையம் திகழ்கிறது. குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகள் உட்பட 25 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய மிகப்பரந்த பயணிகள் வரத்துப்பகுதியைக் கொண்ட இநிலையம், ஆண்டுக்குச் சுமார் ரூ.6 கோடி வரை வருவாய் ஈட்டி, 'என்எஸ்ஜி-5' பிரிவில் உள்ளது.
தற்போது இநிலையம் 3 நடைமேடைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அடிப்படை உள்கட்டமைப்பில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன. பயணிகள் பயணச்சீட்டு எடுத்த பிறகு, நடைமேடை 1-க்கு வர நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும், நடைமேடை மேம்பாலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமையவில்லை.
பாதுகாப்பு மற்றும் 2வது நுழைவாயில் கோரிக்கை:
இரணியல் ரயில் நிலைய அலுவலகத்தில் இதுவரை இரண்டு முறை திருட்டுச் சம்பவங்களும், பயணிகள் மத்தியில் தொடர்ச்சியாகச் செயின் பறிப்புச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துப் பகுதிகளிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
மேலும், திங்கள்நகர் - அழகியமண்டபம் சாலையிலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் அமையும் வகையில், கூடுதல் பயணச்சீட்டு அலுவலகத்துடன் கூடிய 2ஆவது நுழைவாயில் மற்றும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். காலை, மாலை வேளைகளில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வாகனங்கள் ஏறி இறங்குவதற்கெனத் தனிப் பாதையும், வாகனக் காப்பக இடங்களையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முக்கிய 10 அடுக்குக் கோரிக்கைகள்:
பயணிகள் சங்கத்தின் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள 10 முக்கியக் கோரிக்கைகள்:
ரயில் நிலைய நடைமேடைகளில் நவீன லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து நடைமேடைகளிலும் தடையற்ற குடிநீர் வசதி வழங்கப்பட வேண்டும்.
ரயில் வருகை குறித்த அறிவிப்புகள் கடைசி முனை வரை கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட வேண்டும்.
ரயில் பெட்டிகள் நிற்கும் வரிசையைக் காட்டும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட வேண்டும்.
முதலாவது நடைமேடையின் நீளத்தைத் திருவனந்தபுரம் செல்லும் மார்க்கத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தடையின்றிச் செல்ல பிரத்யேக சாய்வுப் பாதை அமைக்க வேண்டும்.
நடைமேடை 1, 2 மற்றும் 3ல் உள்ள மேற்கூரைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.
நடைமேடைகளை ஒட்டியே நவீன பயணிகள் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து நடைமேடைகளிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நவீன இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
சமூக விரோதிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க ரயில் நிலையப் பகுதி முழுவதும் வலுவான இரும்பு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
எம்பியின் செயலற்ற தன்மைக்குக் கண்டனம்:
இவ்விவகாரம் குறித்துப் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், "இரணியல் ரயில் நிலையத்தின் அத்தியாவசியத் தேவைகளைத் தீர்க்க, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் நமது நாடாளுமன்ற உறுப்பினர் உரிய அழுத்தம் கொடுத்துப் பேசினாலே போதும், ஓராண்டுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவேறும். ஆனால், கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் முற்றிலும் செயலற்று விளங்குகிறார். மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து, உரிமையோடு போராடித் திட்டங்களைப் பெறாவிட்டால், குமரி மாவட்டப் பயணிகளுக்கு என்றும் விடிவுகாலம் பிறக்காது" எனத் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!
வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)


