» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதிய பயணிகள் ரயில்கள் அறிவிப்பு: சத்தமில்லாமல் சாதிக்கும் கேரளம் - குமரி மக்கள் ஏமாற்றம்

புதன் 20, ஆகஸ்ட் 2025 3:33:06 PM (IST)

கேரளாவில் ஷொர்ணூர் - நிலாம்பூர் இடையே புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கேரள பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களின் சார்பாக தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் தெற்கு ரயில்வே மண்டலம் மூலம் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டு, இந்த ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் கேரளாவில் பயணிகளின் வசதிக்காக பல புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு, சில ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, நாகர்கோவில் - திருவனந்தபுரம் (56310) பயணிகள் ரயில் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக தங்கள் மாநிலத்தில் உள்ள பக்கத்து மாவட்டம் திருநெல்வேலி வரை எந்த ரயிலும் நீட்டிக்கப்படவில்லை. கேரளாவில் இதற்கு முன்பும் பல புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு, சத்தமில்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. அவை:

எர்ணாகுளம் - கொல்லம் வழி ஆலப்புழா மெமு ரயில்
எர்ணாகுளம் - கொல்லம் வழி கோட்டையம் மெமு ரயில்
எர்ணாகுளம் - காயம்குளம் மெமு ரயில்
கண்ணூர் - கோழிக்கோடு - ஷொர்ணூர் பயணிகள் ரயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ், புதிய பயணிகள் ரயில்கள் மற்றும் ரயில் நீட்டிப்பு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளன. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்டங்கள் சார்பாக தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு திட்ட முன்மொழிவுகள் பொதுவாக அனுப்பப்படுவதில்லை. அனுப்பப்பட்டாலும், அவை பெரும்பாலும் கிடப்பில் போடப்படுகின்றன. திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்டங்களுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த மாவட்டங்களின் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

திருவனந்தபுரம் கோட்டம், நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி ரயில்களை இயக்குவதுடன், பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கிறது. அதேபோல், மதுரை கோட்டம் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ரயில்களை இயக்கி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதனால், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். நாகர்கோவிலிருந்து தமிழ்நாடு வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்போது, நாகர்கோவிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையம் மதுரை கோட்டத்தின் எல்லைக்குள் வருகிறது. 

திருநெல்வேலியில் இடநெருக்கடி சாக்குபோக்கு காரணங்கள் கூறி  , மதுரை கோட்டம் இத்தகைய திட்ட முன்மொழிவுகளை நிராகரிக்கிறது. ஆனால், தங்கள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து அவர்களின் கோட்டம் பயணிகள் பயன்படும் படியாக  தேவையான ரயில்களை இயக்குகின்றனர். இரண்டு கோட்டத்துக்குள் இடையே உள்ள ஈகோ பிரச்சனையை சரி செய்து இருக்க வேண்டிய ரயில்வே மண்டலம் மௌனம் சாதித்து வேடிக்கை பார்க்கின்றது.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

கேரளாவில் ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டது போல, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் பயணிகள் ரயில்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருநெல்வேலிக்கு செல்கின்றனர். 

திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், பகல்நேரத்தில் அலுவலக நேரத்துக்கு செல்ல போதிய ரயில் வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வந்த பிறகு, திருநெல்வேலிக்கு செல்ல மற்றொரு ரயில் இணைப்பு இல்லை. இதனால், பயணிகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே  திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

நாகர்கோவில் முதல் திருநெல்வேலி  இருவழிபாதை திட்டம்

நாகர்கோவில் முதல் திருநெல்வேலி வரை இருவழிபாதையாக மாற்றப்பட்டதும்  இந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு நீட்டிப்பு செய்யப்படும் என்று மிகுந்த ஆவலுடன்  எதிர்ப்பார்க்கப்பட்படது. 

ஆனால் இருவழிபாதை பணிகள் முடியும் ஒருசில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக உள்நோக்கத்துடன் இந்த ரயிலை நீட்டிப்பு செய்ய முடியாதபடி நிலாம்பூர் - கொச்சுவேலி எக்ஸ் ரயிலின் காலி பெட்டிகளை கொண்டு இந்த  திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் இயக்கி நாகர்கோவிலில் பராமரிப்பு செய்வதால் இந்த ரயிலை இனி ஒருபோதும் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய முடியாதபடி சதி செய்து உள்ளார்கள் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள்.  இதில் வேடிக்கை என்னவென்றால்  இந்த திட்டத்தை செயல்படுத்தியது  கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அதிகாரி ஆவார். 

கேரளாவில், குருவாயூர் - திருச்சூர் மற்றும் கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில்கள் இணைக்கப்பட்டு, புனலூர் - குருவாயூர் ரயிலாக இயக்கப்பட்டது. பின்னர், மதுரை - செங்கோட்டை, செங்கோட்டை - கொல்லம், புனலூர் - குருவாயூர் ரயில்கள் இணைக்கப்பட்டு, குருவாயூர் - மதுரை ரயிலாக இயக்கப்படுகிறது. இதேபோல், கோட்டையம் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - நிலாம்பூர் (56363/56362) பயணிகள் ரயில்கள் இணைக்கப்பட்டு, கோட்டயம் - நிலாம்பூர் ரயிலாக இயக்கப்படுகிறது.

இதைப் போலவே, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள தமிழகப் பகுதிகளில், திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில்களை இணைத்து, திருநெல்வேலி - திருவனந்தபுரம் வடக்கு என்ற ஒற்றை ரயிலாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயில்களை இணைத்து, திருவனந்தபுரம் வடக்கு - திருநெல்வேலி என்ற ஒற்றை ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால், திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அலுவலக நேரத்தில் செல்ல ரயில் வசதி கிடைக்கும்.

இந்த இரண்டு ரயிலையும் திருநெல்வேலி – திருவனந்தபுரம் என்று இயக்குவதற்கு எந்த ஒரு முனைய பிரச்சனையும் இல்லை எளிதாக நீட்டிப்பு செய்து இயக்கமுடியும். ஆனால் இவ்வாறு இயக்குவதற்கு இரண்டு கோட்ட அதிகாரிகளுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory