» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ ஆலயத்தை திறக்க வேண்டும்: ஆணையத்தலைவர் பேட்டி!
புதன் 20, ஆகஸ்ட் 2025 12:01:09 PM (IST)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை திறக்க வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சொ.ஜோ அருண் தெரிவித்தார்
மாறாக மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அந்த ஆலயத்திற்கு சென்று, தங்களுடைய உறவினர்கள் குணமடைய வேண்டுமென்று பிராத்தனை மேற்கொண்டு வந்தார்கள். அவ்வாலயத்தை திறந்து பொதுமக்கள் வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது என்று சிறுபான்மையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சொ.ஜோ அருண் தெரிவித்தார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்பணி சொ.ஜோ அருண் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படியும், துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின் படியும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் ஜூலை 2024 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 27 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு, தற்போது 28 வது மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து, இன்று கலந்தாய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசால் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுவரை பயணம் மேற்கொண்ட 27 மாவட்டங்களில் 839 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 661 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 178 பரிந்துரைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்துள்ளோம். அப்பரிந்துரைகள் குறித்து அரசு செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்களை அழைத்து, சிறுபான்மை மக்களுக்கு உள்ள குறைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து இந்த பரிந்துரைகளுக்கு கொள்கை அளவில் முடிவெடுக்க வேண்டும் என்ற முனைப்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் முழுமுயற்சி எடுத்துவருகிறார்கள்.
இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்து சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளோம். அதில் முக்கிய பிரச்சினையாக சிறுபான்மையினருடைய சொந்த பட்டா நிலத்தில் ஆலயம் கட்டி, வழிபாடு மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி சிறுபான்மை மக்களின் வேண்டுகோளை மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் அவர்களும் கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்பட்ட சிறுபான்மையினர் சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1939 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு ஆலயம் நீண்ட காலமாக திறக்கபடாமல் மூடப்பட்டுள்ளது என என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். நான் விசாரித்த வகையில் அந்த ஆலயத்தில் பாதிரியார்கள் உட்பட யாரும் மத போதனைகள் செய்வதில்லை.
மாறாக மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அந்த ஆலயத்திற்கு சென்று, தங்களுடைய உறவினர்கள் குணமடைய வேண்டுமென்று பிராத்தனை மேற்கொண்டு வந்தார்கள். அவ்வாலயத்தை திறந்து பொதுமக்கள் வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
கபரஸ்தான் (முஸ்லீம் கல்லறை) இருக்கக்கூடிய இடத்திலிருந்து மண்ணை மாற்றுவதில் பிரச்சனைகள் உள்ளன. அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளவதோடு, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டுமென முஸ்லீம் சகோதரர்கள் கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையினை பரிசீலினை செய்து, தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் 2 ஏக்கர் அளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் கல்லறை அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்தப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அரசு பள்ளிகளில் கடைபிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்று சிறுபான்மை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மையினர் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற 21 சிறுபான்மையினர் மகளிர்க்கு ரூ.1,17,600/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 19 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ்ராஜன், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஸ்வர்ணராஜ், எஸ்.வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (ஊரக வளர்ச்சி முகமை), பத்ஹூ முகம்மது நசீர் (மகளிர் திட்டம்), கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுபாணி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
