» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கனிமவள லாரி மோதியதில் அந்தரத்தில் தொங்கிய மினிலாரி டிரைவர் படுகாயம்!

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:32:45 AM (IST)

குழித்துறையில் கனிமவள லாரி மோதியதில் மினிலாரி சாலை தடுப்பை உடைத்தபடி அந்தரத்தில் தொங்கியது. இதில் படுகாயமடைந்த டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிலாரி புறப்பட்டது. இதனை மதுரை மாவட்டம் மன்னாடிமனம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் ஓட்டினார். இந்த மினிலாரி நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 6.30 மணிக்கு குழித்துறை மேம்பாலத்தை கடந்து சென்றது.

அப்போது களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த அனீஷ் (45) என்பவர் கனிமவள லாரியை, அதன் பின்னால் ஓட்டியபடி சென்றார். இதனை கவனித்த பழத்தை ஏற்றிச் சென்ற லாரியின் டிரைவர், சாலையோரம் ஒதுங்கும் வகையில் வாகனத்தை ஓட்டினார். உடனே கனிமவள லாரி டிரைவர், அந்த லாரியை முந்திச் செல்ல முயன்றார்.

அதே சமயத்தில் எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. இதனால் செய்வதறியாமல் கனிமவள லாரி டிரைவர் தவித்தார். அதே சமயத்தில் பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை இடது பக்கமாக திருப்பினார். இதனால் பழத்தை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும், கனிமவள லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மினிலாரி சாலையோர தடுப்பை உடைத்தபடி சென்று, அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. டிரைவர் முருகன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.மினிலாரியில் இருந்த பழங்கள் சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் விபத்துக்கு காரணமான கனிமவள லாரியின் ஒரு பக்கம் சேதமடைந்தது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய முருகனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றிய தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவானது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கனிமவள லாரிகளால் ஏற்கனவே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த லாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் நகர்ப்புறம் வழியாக செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் சில லாரிகள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும், அதிவேகமாகவும் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்தநிலையில் தான் வேகமாக செல்லும் கனிமவள லாரியால் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. இதனை தடுக்க கனிமவளத்தை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory