» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நமது மாநிலத்தில் உள்ள பக்கத்து மாவட்ட தலைநகரான திருநெல்வேலிக்கு வங்கிகள், பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரி, மருத்துவமனை , அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தினசரி சென்று பணிபுரிந்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் திருநெல்வேலிக்கும் உயர் கல்விக்காகவும் தினசரி சென்று வருகின்றனர்.
இவ்வாறு தினசரி திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகளுக்கு ரயில் சேவை இல்லை. தற்போது உள்ள ரயில் நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது காரணத்தால் சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்வது இல்லை. ஒருசில பயணிகள் இந்த நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து திருநெல்வேலிக்கு சென்று விட்டு தங்கள் பணிகளை முடித்த பிறகு திரும்பி திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் மார்க்கம் வருவதற்கு எந்த ஒரு ரயில் வசதியும் இல்லை.
தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை அலுவல் நேரத்துக்கு திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் விபரம்
1. நாகர்கோவில் - மங்களூர் பரசுராம் - 04:10
2. மதுரை- புனலூர் பயணிகள் ரயில் - 04:40
3. நாகர்கோவில் - கொல்லம் ரயில் - 06:25
4. சென்னை - கொல்லம் அனந்தபுரி -07:33
5. நாகர்கோவில் - கொச்சுவேலி – 08:10
6. கன்னியாகுமரி - மும்பை எக்ஸ் - 09:05
7. கன்னியாகுமரி – பெங்களுர் - 10:30
திருவனந்தபுரத்துக்கு இவ்வளவு ரயில்கள் இருக்கும் போது கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்துள்ள நமது மாநிலம் தமிழ்நாடு நோக்கி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை அலுவல் நேரத்துக்கு திருநெல்வேலி மார்க்கம் செல்ல தினசரி ரயில்கள் விபரம்
1. நாகர்கோவில் - மும்பை - 6:15
2. குருவாயூர் - சென்னை - 06:33
3. நாகர்கோவில் - கோயம்புத்தூர் - 7:50
இந்த மூன்று ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலில் திருநெல்வேலி சென்று தங்கள் பணிகளை முடித்துவிட்டு திரும்பி நாகர்கோவில் வருவதற்கு பார்த்தால் ஒரு ரயில் சேவை கூட பகல் நேரத்தில் திருநெல்வேலி – நாகர்கோவில் மார்க்கம் இல்லை. இதனால் பயணிகள் ரயிலில் பயணம் செய்யாமல் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.
திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவில் வசித்து வருகின்றனர். அவர்கள் ரயில் போக்குவரத்துக்கு ஆளூர், இரணியல் பள்ளியாடி, குழித்துறை, குழித்துறை மேற்கு மற்றும் பாறசாலை ரயில் நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி மக்கள் திருவனந்தபுரத்திலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் சந்திப்பு வந்து விட்டு அங்கிருந்து திருநெல்வேலி செல்ல அடுத்து ரயில் இணைப்பு வசதி கிடையாது. இதனால் நாகர்கோவில் பேருந்து நிலையம் வந்து பின்னர் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் மட்டுமே பயணம் செய்யும் நிலை உள்ளது.
நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து எவ்வளவு பயணிகள் இந்த மார்க்கத்தில் பயணிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே திருவனந்தபுரத்திலிருந்து தற்போது காலையில் 6:50 மணிக்கு புறப்படும் 56306 ரயில் நாகர்கோவில் 8:55 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து அலுவல் பணிகளுக்கு செல்ல வசதியாக காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி செல்லுமாறு காலஅட்டவணை அமைத்து இயக்க வேண்டும். மறுமார்க்கமாக இந்த ரயில் தற்போது நாகர்கோவிலிருந்து 18:20 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்படுகிறது. இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் போது திருநெல்வேலியிருந்து மாலை 17:15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு தற்போது செல்லும் நேரம் 20:25 மணிக்கு செல்லுமாறு இயக்க வேண்டும்.
திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வடக்கு இரண்டு பயணிகள் ரயிலை இணைத்து திருநெல்வேலி - திருவனந்தபுரம் வடக்கு ஒரே ரயிலாக இயக்க கோரிக்கை
திருநெல்வேலி மாவட்ட மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தம் திருவனந்தபுரத்துக்கு பயணம் செய்கின்றனர். இவ்வாறு செல்லும் மக்களுக்கு நேரடியாக திருவனந்தபுரத்துக்கு செல்ல போதிய ரயில்கள் குறிப்பாக நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கங்களில் உள்ள சிறிய ரயில் நிலையங்கள் மேலப்பாளையம், செங்குளம், பணகுடி, தோவாளை, காவல்கிணறு போன்ற ரயில் நிலையங்களிலிருந்து ரயில்வே ஊழியர்கள் பயணிகள் பொதுமக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்ட அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.
ஆகவே தற்போது திருநெல்வேலி இருந்து காலை புறப்படும் 56708 ரயிலையும் 56305 நாகர்கோவில் -திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயிலை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி – திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி ) என்று இயக்க வேண்டும். இதைப்போல் மறுமார்க்கமாக 56310 திருவனந்தபுரம் வடக்கு - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருவனந்தபுரத்திலிருந்து மதியம் 4:00 மணிக்கு புறப்படுமாறு இயக்கி தற்போது 56707 நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் உடன் இணைத்து ஒரே ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு – திருநெல்வேலி பயணிகள் ரயில் என்று இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது திருநெல்வேலி மாவட்ட மக்கள் கொச்சுவேலியிருந்து கொங்கள் வழித்தடம் வழியாக மும்பை செல்லும் பல்வேறு ரயில்களில் இணைப்பு ரயில் சேவை கிடைக்கும்.
இவ்வாறு இந்த இரண்டு ரயில்கள் இயக்கும் போது திருநெல்வேலி இருந்து காலையில் புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு அலுவல் நேரம் 10:00 மணிக்கு செல்ல தக்க ரயில் சேவை கிடைக்கும். இதைப்போல் இவ்வாறு சென்ற ரயில் மாலையில் அலுவல் பணிகளை முடித்து திரும்பி வருவதற்கு ரயில் சேவை கிடைக்கும். அடுத்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலிக்கு காலை அலுவல் நேரத்திற்கு செல்ல ரயில் வசதி கிடைக்கும் மறுமார்க்கமாக அலுவல் பணி முடித்து ரயிலில் பயணம் திரும்பி வருவதற்கு ரயில் வசதி கிடைக்கும்.
தற்போது கொல்லத்திலிருந்து காலையில் திருவனந்தபுரம், நாகர்கோவில் மார்க்கமாக தொடர்ச்சியாக நான்கு ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆனால் நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கமாக மிகவும் குறைந்த அளவில் பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றது.
1. புனே - கன்னியாகுமரி - 07:15
2. புனலூர் - கன்னியாகுமரி - 7:55
3. பெங்களுர் - கன்னியாகுமரி - 10:30
4. கொல்லம் - கன்னியாகுமரி மெமு - 11:35
இதில் ஏதேனும் ஒரு ரயிலை கன்னியாகுமரி செல்லாமல் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
இவ்வாறு மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றிய பட்சத்தில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி மார்க்கத்தில் காலையில் ஒரு ரயில் மதியம் ஒரு ரயில் மாலையில் ஒரு ரயில் என்று மூன்று ரயில்கள் இயங்கும். இது கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
