» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேருந்து நிலையம், நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகள் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:59:38 PM (IST)

களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - குழித்துறை நகராட்சியில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் செல்லும் கருங்கல் சாலையில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் மீன் சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தை 13380 ச.மீ பரப்பளவில் செயல்பட்டு வருகின்றது.
இதில் தினசரி காய்கறி சந்தை 8500 ச.மீ பரப்பளவில் சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகின்றது. அங்குள்ள கடைகள் அனைத்தும் 30 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டதாகும். தற்பொழுது தினசரி காய்கறி சந்தையில் 248 எண்ணிக்கை கடைகள் தனித்தனியே ஏலம் விடப்பட்டு நடைமுறையில் உள்ளது. காய்கறிச் சந்தையின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1.81 கோடி ஆகும். கடைகள் அனைத்தும் மிகவும் பழுதடைத்து காணப்படுவதால் அதனை முற்றிலும் அகற்றி விட்டு புதியதாகக் கடைகள் கட்ட வேண்டியது அவசியமாகும்.
எனவே சந்தையில் உள்ள 253 கடைகளையும் இடித்து விட்டு புதியதாக கடைகள், வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் காய்கறிச் சந்தையை புதுபிப்பதற்கொன அரசாணை வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் குழித்துறை நகராட்சியில் ரூ.14.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக தினசரி சந்தை கட்டும் பணி மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 20.09.2023 அன்றைய ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, நகர்மன்ற ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றது.
தற்சமயம் 156 கடைகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய காய்கறிச் சந்தை, ஆண் மற்றும் பெண் இருபாலருக்குமான தனித்தனி கழிப்பறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் போன்ற வசதிகளுடன் நடைபெற்று வரும் பணியானது அக்டோபர் மாதம் 2025-க்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனைத்தொடர்ந்து களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையமானது தரைத்தளம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களை கொண்டது.
தரைத்தளத்தில் 4 கடைகள், 2 அலுவலகம், 4 ஆண்கள் கழிப்பறை மற்றும் 6 பெண்கள் கழிப்பறைகளும், முதல் தளத்தில் 2 அலுவலகம், 4 கடைகளும். 3 ஆண்கள் கழிப்பறைகளும், 5 பெண்கள் கழிப்பறைகளும், இரண்டாம் தளத்தில் மூன்று கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4063.29 சதுர மீட்டர் ஆகும். பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆய்வில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், குழித்துறை நகராட்சி ஆணையர் இராஜேஸ்வரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இராமலிங்கம், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், செயற்பொறியளர் குறள்செல்வி, களியக்காவிளை செயல் அலுவலர் சந்திரகலா, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
