» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து

வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)



இந்தியா, ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக ராஜ்நாத் சிங் கான்பெரா சென்றார். விமான நிலையத்தில், அவரை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் பீட்டர் கலீல் மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்நாத் சிங்குக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு துணை பிரதமரும், பாதுகாப்பு மந்திரியுமான ரிச்சர்ட் மார்லஸ், ராஜ்நாத் சிங்கை வரவேற்றார். இருதரப்பு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் ரிச்சர்ட் மார்லசுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராணுவ வன்பொருளை கூட்டு உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள், எதிர்காலம் சார்ந்த மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாதுகாப்பு துறை தகவல் பகிர்வு, கடற்சார் பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசையும் ராஜ்நாத் சிங் சந்தித்தார். முன்னதாக சிட்னியில் இருந்து கான்பெராவுக்கு ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையின் மல்டிரோல் டேங்கர் விமானத்தில் பயணித்தபோது​எப்-35 போர் விமானத்துக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய விமானப்படை மற்றும் இந்திய ஆயுதப்படைகள் வான்வழி எரிபொருள் நிரப்புதலை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், "பாதுகாப்பு துறை, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய சவால்கள் உள்பட இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழுவதையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். இந்திய பாதுகாப்பு துறையின் விரைவான வளர்ச்சியையும், உலகளவில் உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் நம்பகமான ஆதாரமாக இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தையும் நான் எடுத்துரைத்தேன். 

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஆஸ்திரேலியாவின் உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்” என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory