» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்பிரிக்க நாட்டில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:58:05 AM (IST)



ஆப்பிரிக்க நாடான சாட்டில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ராவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (வயது 41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி நடைபெற்றது. இந்த கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார்.

இதனால் அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார். இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில் கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர். இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. எனவே கலவரத்தை தூண்டியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் மஸ்ராவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸ்ரா இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சம்பவம் சாட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory