» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜனநாயகன் பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு!

சனி 10, ஜனவரி 2026 4:06:56 PM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த 6 மற்றும் 7-ந்தேதி விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நேற்று காலை தீர்ப்பு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

‘ஜனநாயகன்’ படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி, யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர்.

அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், டிசம்பர் 22-ந்தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்க தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.

இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஆன்லைன் மூலம் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசனும் ஆஜராகி, ‘ஜனநாயகன் படத்தை தணிக்கை மறுஆய்வு குழுக்கு பரிந்துரை செய்ததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 

7-ந்தேதி புகார் நகல் தாக்கல் செய்தோம். நேற்று வழக்கின் தீர்ப்பை நீதிபதி அவசர கதியில் பிறப்பித்து விட்டார். பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள், இடங்கள் இடம் பெற்றுள்ளது என புகார் வந்ததால், படம் மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இவ்வாறு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை. எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்' என்று வாதிட்டனர்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘தனி நீதிபதி முழுமையாக விசாரித்துதான் தீர்ப்பு அளித்துள்ளார். படத்தை பார்த்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு இதுபோல பரிந்துரை செய்ய முடியாது. இது புதுவிதமான நடவடிக்கையாக உள்ளது. படத்தை 9-ந்தேதி (நேற்று) வெளியிட திட்டமிட்டு, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை' என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்? இவ்வாறு முடிவு செய்து, வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என நீதித்துறைக்கு அழுத்தம், நிரப்பந்தம் கொடுக்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய கூட அவகாசம் கொடுக்காத அளவுக்கு இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்களன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory