» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

தமிழகத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள 65 தொகுதிகளின் பட்டியலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திடீர் பயணமாக தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள 65 தொகுதிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெறப்பட்ட வாக்குச் சதவீதம் அடிப்படையில் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், குமரி, நெல்லை உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வருகின்ற ஜனவரி மாதம் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்ததாகவும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 4-ல் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory