» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)



மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

இலங்கைக்கு நிவாரண உதவிகளை பிரதமர் மோடி அறிவித்தார். இலங்கையில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலின் தாக்கத்தால் நேற்று மழைப்பொழிவு வெகுவாகத் தீவிரமடைந்தது. இதனால் மலையகப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக மாறியதுடன், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுப் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 21 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலைமையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஆறுகள் நிரம்பி வழிவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்று அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிட்வா புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக கொழும்பு கிரிக்கெட் மைதானத்தை அவசரகால பேரிடர் முகாமாக மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3,000 மக்களை இங்கு தங்க வைத்து, அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனிடையே இலங்கைக்கு நிவாரண உதவிகளை பிரதமர் மோடி அறிவித்தார். கடும் மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து உள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகளை செய்ய 'Operation Sagar Bandhu' என்ற பெயரில் உதவியை பிரதமர் மோடி அறிவித்தார். முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூடுதல் உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. இந்தியாவின் INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கூடுதல் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory