» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதியை நிலை நாட்ட எப்போதும் முயற்சித்தேன் : ஓய்வு பெறும் நாளில் பி.ஆர். கவாய் உருக்கம்

வெள்ளி 21, நவம்பர் 2025 5:53:55 PM (IST)



அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன் என்று  பி.ஆர்.கவாய் தெரிவித்தார். 

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார் பி.ஆர்.கவாய். தனது இறுதி பணி நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் உரையாற்றிய அவர், "உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985 ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். 

இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோதும் இதனை அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன்.

அம்பேத்கரின் போதனைகளிலிருந்தும், அரசியலமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25 ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான் நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார்.

அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த கவாய், புத்த மதத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மே 24, 2019 அன்று மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory