» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கைது!

வெள்ளி 21, நவம்பர் 2025 11:27:37 AM (IST)



சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க கவசத்தை அபகரித்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணி என கூறி துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவுநிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது. தங்க கவசத்தை தாமிர கவசம் என கூறி திட்டமிட்டு கொள்ளையடித்த பகீர் சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான பொறுப்பில் இருந்தவர்கள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது சிறப்பு விசாரணை குழுவின் அதிரடி விசாரணையில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வழக்கில் இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுனீஷ் குமார், முன்னாள் தலைவரும், ஆணையருமான வாசு, திருவாபரண ஆணையர் பைஜு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அடுத்த கட்டமாக முன்னாள் தேவஸ்தான தலைவரான பத்மகுமாரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை சிறப்பு விசாரணை குழுவினர் தொடங்கினர். இதில் அவருக்கும், இந்த தங்கம் அபகரிப்பு வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து எஸ்பி சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர். அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் பத்மகுமார் பணப்பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் அம்பலமானது.

கைதான பத்மகுமார் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூறுகையில், நான் தலைவராக இருந்த போது, சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. சட்டப்பூர்வமாக விசாரணையை எதிர் கொள்வேன் என்றார். பத்மகுமார் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory