» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்குத் திருட்டு போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:10:19 PM (IST)



எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது.

பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அதேபோல பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளை பெற தேர்தல் ஆணையமே உதவி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

'வாக்குத் திருட்டு' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளித்துள்ளது. 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்தி தவறான கதையை உருவாக்குவதற்குப் பதிலாக உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

"ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது 1951-1952 ஆம் ஆண்டு தேர்தல் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. யாரேனும் எந்த தேர்தலிலாவது 2 முறை வாக்களித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் பகிர வேண்டும். பதிலாக, எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்.

இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான கருத்துகளை உருவாக்குவது, கோடிக்கணக்கான வாக்காளர்களின் மீதான நேரடியான தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதலும்கூட" என்று கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory