» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆதார் வைத்திருப்பதால் மட்டும் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:27:48 PM (IST)
ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்தியக் குடிமகனாக்காது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பாபு அப்துல் ரூஃப் சர்தார் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உரிய பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா வந்த பிறகு அவர் போலியான ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் போலியான ஆவணங்களுடன் வசித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நபரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் விண்ணப்பித்திருந்தார். நீதிபதி அமித் போர்க்கர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், யார் இந்தியக் குடிமகன்.. ஒருவர் எப்படிக் குடியுரிமை பெறலாம் என்பதை இந்தியக் குடியுரிமைச் சட்டமே வரையறுப்பதாகத் தெரிவித்தது. மேலும், ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டைகள் போன்றவை அடையாளம் காண்பதற்கோ அல்லது சேவைகளைப் பெறுவதற்கோ மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பாபு அப்துலுக்கு ஜாமீன் வழங்க மறுத்த மும்பை ஐகோர்ட், "குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதில் குடியுரிமை பெறுவதற்கான நிரந்தரமான அமைப்பு உருவாக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், இந்தியாவில் இன்று குடியுரிமை குறித்த கேள்விகளுக்கு பதில் தரும் சட்டமாகும். யார் குடிமகனாக இருக்க முடியும், எப்படிக் குடியுரிமை பெறலாம் என்பதை இந்தச் சட்டமே வரையறுக்கிறது.
ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்தியக் குடிமகனாக்காது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண்பதற்கோ அல்லது சேவைகளைப் பெறுவதற்கோ மட்டுமே. ஆனால் குடியுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குடியுரிமைக்கான அடிப்படைத் தேவைகளை இவை பூர்த்தி செய்யாது.
இந்தக் குடியுரிமைச் சட்டம் சட்டப்பூர்வக் குடிமக்களுக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை வரைகிறது. சட்டவிரோதக் குடியேறிகள் குடியுரிமை பெறுவதை இந்த சட்டம் தடை செய்திருக்கிறது. இந்த வேறுபாடு முக்கியமானது, ஏனெனில் இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது.
மேலும், குடிமக்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளைச் சட்டவிரோதக் குடியேறிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது" என்றனர். மேலும், சர்தாருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம், அவரது வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் தப்பித்துச் செல்லக்கூடும் என்ற போலீசாரின் அச்சம் நியாயமானது தான் என்றும் குறிப்பிட்டது.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சிறியவை அல்ல. அனுமதி இல்லாமல் இந்தியாவில் தங்குவது.. அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது மட்டுமின்றி, இந்தியக் குடிமகன் போலத் தன்னை காட்டிக் கொள்ளப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றனர்.
முன்னதாக சர்தாரின் பிணை மனுவில், தான் உண்மையான இந்தியக் குடிமகன் என்றும், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க உறுதியான அல்லது நம்பகமான ஆதாரம் இல்லை என்றும் கூறினார். மேலும், தனது ஆவணங்கள் வருமான வரி ரிட்டர்ன் உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் மும்பைக்கு அருகிலுள்ள தானே மாவட்டத்தில் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
