» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரகாண்டில் அதிகனமழையால் பேரழிவு: 50 பேர் கதி என்ன? மீட்பு பணி தீவிரம்

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:53:14 AM (IST)

உத்தரகாண்டில் அதிகனமழையால் பேரழிவு ஏற்பட்ட பகுதியில் 6 நாட்களுக்கும் மேலாக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ள தராலி கிராமப்பகுதியில் கடந்த 5-ஆம் தேதி அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டது. தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்த இந்த வெள்ளமும், சேறும் அங்கிருந்த கட்டிடங்களை மூழ்கடித்தது. 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ஏராளமான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன.

இந்த பேரிடரில் சிக்கி 4 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் மாயமாகி உள்ளனர். சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகள் என ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். உடனடியாக மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உள்பட ஏராளமான மீட்புப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். மேலும் ராணுவமும் இந்த மீட்புப்பணிகளில் இணைந்தனர்.

மாயமானவர்களை தேடும் பணிகளும், ஆங்காங்கே சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இதற்காக ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நேற்று 6-வது நாளை எட்டின. மோசமான வானிலை காரணமாக நேற்று காலை 10 மணி வரை இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்தது.

நெடுஞ்சாலையில் லிம்சகாட்டில் அமைக்கப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இருந்தது. இதனால் தராலி கிராமம் துண்டிக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை ராணுவம் முழுவீச்சில் நடத்தி வந்தது. இது நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. இதன் மூலம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சீரடைந்தது.

இதனால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேலும் தீவிரமடையும் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், மாயமான சுமார் 50 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக சிறப்பு கேமராக்கள், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 6 லாரிகளை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அனுப்பி வைத்தார். இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு பல இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 

மாநிலத்தில் இந்த பருவமழை காலத்தில் இதுவரை 37 பேர் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியாகி உள்ளனர். மேலும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory